முல்லை பெரியாறில் புதிய அணை ரூ.1,500 கோடியில் கேரளா திட்டம்: டிசம்பரில் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு

திருவனந்தபுரம்: முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான கேரள அரசின் திட்ட அறிக்கை இறுதி  கட்டத்தில் இருப்பதாகவும், டிசம்பர் மாதத்தில் இந்த அறிக்கை ஒன்றிய நீர்வள ஆணையத்தின் அங்கீகாரத்துக்காக தாக்கல் செய்ய தீர்மானித்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளன. முல்லை பெரியாறு அணை உடையும் ஆபத்தில்  இருப்பதாக கூறி, கேரள அரசு நீர்மட்டத்தை பல வருடங்களாக 136 அடிக்கு மேல்  உயர்த்தாமல் இருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது. உச்சநீதிமன்றம், அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிட்டது.  

இதையடுத்து கடந்த சில வருடங்களாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம்  உயர்த்தப்பட்டு வருகிறது. தற்போது கேரளாவில் கனமழை பெய்து வருவதால் அணையின்  நீர்மட்டம் 137 அடியை  தாண்டியுள்ளது. இந்நிலையில் அணை உடையும் ஆபத்தில் இருப்பதாக கூறி மீண்டும்  கேரளாவில் பிரசாரங்கள் தொடங்கி உள்ளன. வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ‘‘சேவ் முல்லை பெரியாறு’’ ‘‘டி கமிஷன் முல்லை பெரியாறு’’ என்ற  பெயர்களில் பிரசாரம் நடந்து வருகிறது.

முல்லை  பெரியாறு அணையில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ள குத்தகை உரிமையை ரத்து  செய்ய வேண்டும் என்று கூறி சுற்றுசூழல் ஆர்வலரான ஜோஸ் ஜோசப்  உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இதில், முல்லை பெரியாறு அணை  ஆபத்தான நிலையில் இருப்பதால் அணையின் செயல்பாட்டை நிறுத்தி வைக்க வேண்டும்  என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கான்வில்க்கர்,  ரவிகுமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.  விசாரணை நடத்திய நீதிபதிகள், அணையின் நீர்மட்டம் குறித்து உச்சநீதிமன்றம்  முடிவு எடுக்க முடியாது.

இதுதொடர்பாக ஒன்றிய நீர்வள ஆணையம் தான் முடிவெடுக்க  முடியும். அணை விவகாரத்தில் இரு மாநிலங்களும் அரசியல் செய்ய கூடாது என்று  கூறினர். இதுதொடர்பாக ஒன்றிய நீர்வள ஆணையம் அறிக்கை தாக்கல் செய்யவும்  உத்தரவிட்டனர். இந்த நிலையில் முல்லை  பெரியாறு புதிய அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை  கேரள அரசு முடுக்கி விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே  கடந்த 10 வருடங்களுக்கு முன்பு புதிய அணை கட்டப்போவதாக கேரள அரசு  அறிவித்தது. அப்போது ரூ.400 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை கேரள அரசு  தயாரித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை பரிசீலித்த உச்சநீதிமன்றம்  தமிழ்நாட்டின் அனுமதியின்றி அணை கட்ட கூடாது என்று உத்தரவிட்டது.  இதையடுத்து கேரள அரசு அணை கட்டும் முடிவை கிடப்பில் போட்டது. என்றாலும்  புதிய அணை கட்டும் முடிவில் இருந்து கேரளம் பின்வாங்கவில்லை. தற்போது  இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தில்  இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த புதிய அணைக்கு ரூ.1500 கோடி  செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக கேரள  நீர்பாசனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்பாசனம் வடிவமைப்பு மற்றும்  ஆய்வு வாரியம் (ஐடிஆர்பி) திட்ட அறிக்ைக தயாரித்து வருகிறது. டிசம்பர்  மாதத்தில் இந்த அறிக்கையை ஒன்றிய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்ய  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* தமிழகத்துடன் ஒப்பந்தமா?

கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் நேற்று அளித்த பேட்டியில், ‘‘முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் முடிவில் கேரளா உறுதியாக இருக்கிறது. புதிய அணை கட்டினாலும் தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படும். அது அச்சப்பட தேவையில்லை. வரும் டிசம்பரில் நடக்கும் தமிழக, கேரள முதல்வர்கள் கூட்டத்தில், புதிய அணை தொடர்பாக ஒப்பந்தம் செய்ய கேரள அரசு திட்டமிட்டுள்ளது. அதன் பிறகு, புதிய அணை கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,’’ என்றார்.

* 883 குடும்பங்களை மாற்ற வேண்டும்

வண்டி பெரியாரில் நேற்று காலை இடுக்கி மாவட்ட கலெக்டர் ஷீபா ஜார்ஜ் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. கட்டத்தில், அணை திறக்கப்பட்டால் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கலெக்டர் கூறியதாவது: காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு 2637 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 137.6 அடியாக உள்ளது. அணையில் இருந்து 2300 கன அடி தண்ணீரை தமிழகம் கொண்டு செல்கிறது. அணை திறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் தகவல் தெரிவிக்கவேண்டும் என்று தமிழக அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணை திறக்கப்பட்டால் 883 குடும்பங்களை அங்கிருந்து மாற்றவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* புதிய அணைக்கு கவர்னர் ஆதரவு

கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் கூறியதாவது: முல்லைபெரியாறு அணை அருகில் வசிக்கும் மக்கள் தற்போது அணை உடைந்துவிடுமோ என்ற பீதியில் உள்ளனர். எனவே புதிய அணை கட்ட வேண்டியது அவசியமான ஒன்றாகும். ஆனால் நீர் பங்கீடு தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றத்தில் தான் தீர்வு காண வேண்டும். முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* ஒன்றிய, தமிழகம், கேரளா அதிகாரிகள் ஆலோசனை

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக ஒன்றிய நீர்வளத்துறை தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று காணொலி மூலமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய அரசு, தமிழகம், கேரளாவை  சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பாக கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில்,அணை பாதுகாப்பு, நீர் பிடிப்பு, கோடை மற்றும் மழைக் காலங்களில் எத்தனை கனஅடி வரை தண்ணீரை அணையில் சேமிக்க முடியும்.

இதில் கடந்த காலங்களில் உட்சபட்சமாக எவ்வளவு நீர் சேமிக்கப்பட்டது என்பது குறித்த அனைத்தும் விரிவாக பேசப்பட்டுள்ளது. இது அறிக்கையாக தயாரித்து உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய நீர்வளத் துறை தாக்கல் செய்துள்ளது. இன்றைய விசாரணையின் போது உச்ச நீதிமன்றத்தில் இது விவாதிக்கப்பட உள்ளது. இதில், ‘முல்லைப் பெரியாறு அணை முழு பாதுகாப்பாக உள்ளது. இதில், 152 அடி வரையிலும் தண்ணீரை சேமித்து வைக்க முடியும். இதை ஒன்றிய அரசும் ஆய்வு செய்து சில ஆண்டுகளுக்கு முன்னதாக உறுதி செய்துள்ளது,’ என தெரிவித்தனர்.

Related Stories:

More
>