இல்லம் தேடி கல்வி திட்டம் தொடக்கவிழா; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மரக்காணம் வருகை: அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு: விழா ஏற்பாடுகள் தீவிரம்

மரக்காணம்: இல்லம் தேடி கல்வி திட்டத்தை துவக்கி வைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (27ம் தேதி) மரக்காணம் வருகிறார். கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொதுமுடக்கக் காலங்களில், பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு “இல்லம் தேடிக் கல்வி” என்னும் திட்டத்தை அறிவித்தது.  அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் திறனில் எந்தவொரு குறைபாடும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டம் தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய 12 மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட முதலியார்குப்பம் பகுதியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தொடக்கவிழா நாளை (27ம்தேதி) மாலை 3 மணிக்கு நடக்கிறது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது. முன்னதாக மாவட்ட எல்லையான மரக்காணத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. விழாவை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் புறப்பட்டு செல்கிறார். விழாவை முன்னிட்டு முதலியார்குப்பத்தில் பந்தல், மேடை அமைக்கும் பணிகள் கடந்த மூன்று நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விழா ஏற்பாடுகளை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் நேற்று மதியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் விழா முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மோகன், டிஐஜி பாண்டியன், எஸ்பிக்கள் விழுப்புரம் நாதா, கடலூர் சக்தி கணேசன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். நேற்று விழா நடக்கும் இடத்தை அமைச்சர் ஆய்வு செய்தபோது ஆட்சியர், எஸ்பி, விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, திண்டிவனம் சப்-கலெக்டர் அமீத், மரக்காணம் வட்டாட்சியர் உஷா மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

முதல்வர் வருகையை முன்னிட்டு மரக்காணம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் அமைச்சர் மஸ்தான் ஆலோசனை நடத்தினார். அப்போது முதல்வர் வந்து செல்லும் இடம், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

Related Stories: