ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் தேயிலை தோட்டங்களில் புகுந்த காட்டு மாடுகள்: விவசாயிகள், தொழிலாளர்கள் பாதிப்பு

ஊட்டி: ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் அடிக்கடி காட்டு மாடுகள் புகுந்து விடுவதால் விவசாயிகள், தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதி அடர்ந்த வனப்பகுதிகளை ஒட்டியே உள்ளது. அதுவும் பெரும்பாலன தேயிலை தோட்டங்கள் வனங்களை ஒட்டியே காணப்படுகின்றன. இதனால், காட்டு மாடு, புலி, சிறுத்தை, கரடி, மான்கள் மற்றும் காட்டு பன்றி போன்ற விலங்குகள் தேயிலை தோட்டங்களுக்குள் வந்து விடுகின்றன. இங்குள்ள பயிர்களை நாசம் செய்துவிடுகின்றன.

இதுதவிர விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை தோட்டங்களுக்குள் அனுமதிப்பதில்லை. குந்தா வனச்சரகத்திற்குட்பட்ட தேவர்சோலை, தேவப்பெட்டா, கைகாட்டி, சாம்ராஜ் எஸ்டேட், பெங்கால்மட்டம் மற்றும் மைனலை மட்டம் போன்ற பகுதிகளில் காட்டெருமைகளின் தொல்லை அதிகரித்துள்ளது. சாம்ராஜ் எஸ்டேட் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியுள்ளது. இதனால், இந்த வனத்தை ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களுக்கு நாள் தோறும் சுமார் 10 முதல் 50க்கும் மேற்பட்ட காட்டு மாடுகள் வந்து விடுகின்றன. இவைகள் தேயிலை தோட்டங்களுக்கு நடுவே வளர்ந்துள்ள களைச் செடிகளையும், புற்களையும் மேய ஆரம்பித்தால், சுமார் 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை அங்கேயே சுற்றி சுற்றி வருகின்றன.

இதனால், அந்த தேயிலை தோட்டங்களுக்கு விவசாயிகளோ அல்லது கூலித் தொழிலாளிகளோ செல்வதில்லை. சில சமயங்களில் பசுந்தேயிலை பறிக்கக் கூட முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களை விரட்டுவதால், தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Related Stories: