முதலியார்பேட்டை தொகுதியில் சொந்த செலவில் சாலையை சீரமைத்த திமுக எம்எல்ஏ

புதுச்சேரி: புதுவை முதலியார்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏ சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுவை- கடலூர் சாலையில் மரப்பாலம் சந்திப்பு முதல் முதலியார்பேட்டை காவல் நிலையம் வரை சாலை புதுப்பிக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் எனது ஆதரவாளர்களை கொண்டு சாலையை சுத்தம்செய்து வந்தேன். பின்னர் முதல்வர், பொதுப்பணித்துறை அமைச்சர், தலைமை பொறியாளர் என அனைவரின் கவனத்திற்கும் கொண்டு சென்று பலமுறை மனு கொடுத்தேன். சட்டமன்ற கூட்டத்தொடரிலும் இதுதொடர்பாக நான் பேசியதன் அடிப்படையில் ரூ.1.90 கோடி செலவில் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மழைக்காலம் நெருங்குவதால் குறைந்தபட்சம் பேட்ச் வொர்க்காவது செய்து கொடுங்கள் என்றேன். ஆனால் உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி சாலை அமைக்கும் பணியை தாமதப்படுத்தினர். வரும் 26ம் தேதி முதல் பருவமழை தொடங்கும் நிலையில் வாகன ஓட்டிகள், பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்க, எனது சொந்த நிதியிலிருந்து முதலியார்பேட்டை காவல் நிலையம் முதல் மரப்பாலம் சந்திப்பு வரை பேட்ச் ஒர்க் செய்ய முடிவு செய்துள்ளேன். முதல்கட்டமாக மரப்பாலம் சந்திப்பு முதல் டோபிக் குளம் வரை பேட்ச் வொர்க் செய்யப்பட்டுள்ளது.

 

அரசு இனியும் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தொழிலதிபர்கள், பொதுமக்களிடம் பிச்சை எடுத்தாவது, தொகுதியில் அனைத்து சாலைகளிலும் பேட்ச் வொர்க்கை நானே செய்வேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.தொடர்ந்து சாலை பணியை எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

Related Stories:

More
>