மண் கடத்தல்: மாஜி அதிமுக எம்எல்ஏ சிக்கினார்

மணப்பாறை: மண் கடத்திய முன்னாள் அதிமுக எம்எல்ஏ சந்திரசேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதியில் கடந்த இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்தவர் அதிமுகவைச் சேர்ந்த சந்திரசேகர். இவரது சொந்த ஊரான பளுவஞ்சி அடுத்த கல்லாமேட்டில் மகள் மோகனா பெயரில் புதிதாக ஒரு பெட்ரோல் பங்க் அமைக்க உரிமம் பெற்றுள்ளார். இந்த இடம் பள்ளம் என்பதால் அதில் மண்ணை கொட்டி மேடாக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இதற்காக, கடந்த சில நாட்களாக சந்திரசேகர் சொரியம்பட்டி அருகே தனது தந்தை ராமசாமி பெயரில் உள்ள பட்டா நிலத்திலிருந்து கிராவல் மண்ணை பொக்லைன் மூலம் வெட்டி எடுத்து வந்து பெட்ரோல் பங்க் அமைக்கும் இடத்தில் கொட்டி மேடாக்கி வருகிறார். இந்நிலையில், அனுமதியின்றி சட்ட விரோதமாக கிராவல் மண் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் நேற்று வளநாடு போலீசார் சொரியம்பட்டிக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது சந்திரசேகரின் தந்தை இடத்தில் 2 பொக்லைன் மூலம் 3 டிப்பர் லாரிகளில் மண் வெட்டி கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 5 வாகனங்களையும் பறிமுதல் செய்த போலீசார் கல்லாமேட்டில் பெட்ரோல் பங்க் அமையும் இடத்தில்  நிறுத்தினர். இது தெரிந்த அங்கு திரண்ட அதிமுகவினர் வாகனங்களை பறிமுதல் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதனால் அங்கு மணப்பாறை, துவரங்குறிச்சி, வையம்பட்டி போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் ஒலிபெருக்கி மூலம் போலீசார் அவர்களை எச்சரிக்கை விடுத்து கலைத்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, வளநாடு காவல்நிலையத்திற்கு  எடுத்து சென்றனர்.

இதுதொடர்பாக டிரைவர்கள் ஆறுமுகம்(38), பன்னீர்செல்வம்(21),  செல்வராஜ்(23), கண்ணன்(50) ஆகியோரை கைது செய்தனர். மேலும் பொக்லைன் உரிமையாளர்களில் ஒருவரான முன்னாள் அதிமுக எம்எல்ஏ சந்திரசேகர், சுரேஷ், ஆறுமுகம் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பதிவெண் இன்றி கைப்பற்றப்பட்ட ஒரு பொக்லைன் குறித்தும் விசாரிக்கின்றனர்.

Related Stories:

More
>