முஜிபுர், ரஷித் இதேபோல் ஆடினால் எந்த அணியுடனும் போராடலாம்: கேப்டன் முகமதுநபி பேட்டி

ஷார்ஜா:டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் தனது முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை எளிதில் வீழ்த்தியது. சார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 4 விக்கெட்கள் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. கடைசிகட்டத்தில் அந்த அணியின் வீரர் நஜிபுல்லா அதிரடியாக ஆடி 34 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி 3 ஓவர்களில் 28 ரன்கள் சேர்த்தது.

ஆனால் 4வது ஓவரை வீசவந்த முஜிபுர் ரகுமான் தொடக்க வீரர் உள்பட 3 விக்கெட்களை அதே ஓவரில் சாய்த்தார். காலும் மேக்லியோட், ரிசி பெரிங்டான், மேத்யூ க்ராஸ், மைக்கல் லீஸ்க் என நான்கு வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர் ஜார்ஜ் முன்சே மட்டும் அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். அதன்பின்னர் ரஷித்கானின் சுழல் மாயத்தில் 60 ரன்களுக்கு ஸ்காட்லாந்து அணி சுருண்டது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முஜிபுர் ரகுமான் 5 விக்கெட்களையும், ரசித்கான் 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

வெற்றிக்கு பின் ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி கூறுகையில், ``முதல் போட்டியில் வெற்றிபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே வேளையில் அடுத்தடுத்து பெரிய ஜாம்பவான் அணிகளுடன் மோத உள்ளோம். வீரர்களின் கூட்டு முயற்சியால் முயன்றவரை வெற்றிக்காக போராடுவோம். முஜிபுர், ரஷித் அட்டகாசமாக பந்துவீசினர். அவர்கள் இதே நிலையில் ஆடினால் எந்த அணியுடன் நம்பிக்கையுடன் போராடலாம்’’ என்றார்.

Related Stories: