வாக்குறுதி நிறைவேற்ற அறிக்கையை வெளியிட அரசுக்கு கமல் கோரிக்கை

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்ட அறிக்கை: 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு மாதத்தின் முதல் பணி நாளன்றும், தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவான ஆய்வை முதல்வர் மேற்கொள்வார். அதனை தொடர்ந்து ஊடகங்களை சந்தித்து முதல்வர், கலைஞர் அரசின் சாதனை அறிக்கையை  ஊடகங்களுக்கு வழங்குவார். இவ்வாறு சொல்கிறது அந்த வாக்குறுதி. தி.மு.க அரசு பதவியேற்று இதுவரை 200 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊடக சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு கூட்டங்களில் தெரிவித்துள்ளார்.

வரும் நவம்பர் 1ம் தேதி திங்கள்கிழமை மாதத்தின் முதல் பணி நாளாகவே அமைகிறது. அந்த நாளுக்கு வேறொரு வரலாற்று முக்கியத்துவமும் உண்டு. அந்நாளில்தான் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இந்த சிறப்புமிக்க நாளில் இருந்து, மேற்குறிப்பிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய அறிக்கையை ஊடகங்களுக்கு வழங்கும் வாக்குறுதியை நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டுமென்று தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories:

More
>