ரூ.1,500 கோடி மதிப்பில் புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு தீவிரம்: அறிக்கையை ஆண்டு இறுதிக்குள் மத்திய அரசிடம் ஒப்படைக்க திட்டம்

திருவனந்தபுரம்: தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக 1,500 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை கேரள அரசு இறுதி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முல்லைப்பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து இருப்பதாக கூறி புதிய அணையை கட்டுவதற்கு அம்மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்ததால் புதிய அணையை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை கேரள அரசு தயாரித்து வருகிறது.

1,500 கோடி மதிப்பிலான புதிய அணைக்கான திட்ட அறிக்கையை வருகிற டிசம்பர் மாதம் ஒன்றிய நீர்வள ஆணையத்திடம் ஒப்படைக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது. 2011-ம் ஆண்டில் புதிய அணை கட்ட முடிவு செய்து தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கைக்கு பதில் முற்றிலுமாக மாறுபட்ட திட்ட அறிக்கையை கேரளா தயாரித்து வருகிறது. இது தொடர்பான பணியில் கேரள நீர்ப்பாசன துறையின் கீழ் இயங்கும் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு ஈடுபட்டுள்ளது. ஒன்றிய நீர்வளத்துறையின் யோசனைகளை திட்ட அறிக்கையில் இடம்பெற செய்ய கேரளா நடவடிக்கை எடுத்துள்ளது.

கேரள அரசின் இந்த நடவடிக்கையால் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் தங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என தமிழக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More
>