உருமாறிய AY.4.2 கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு நடப்பதாக அமைச்சர் மாண்ட்வியா தகவல்

டெல்லி: இந்தியாவில் ஒருசிலரை பாதித்துள்ள உருமாறிய AY.4.2 கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு நடப்பதாக அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தகவல் அளித்துள்ளார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் என்சிடிசி நிபுணர்கள் புதிய வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகளுக்கான ஜைகோவ்-டி தடுப்பூசி விலை குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் மன்சுக் மாண்ட்வியா பேட்டியளித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் கட்டமைப்பில் உள்ள தொழில்நுட்ப குழு கோவாக்சின் தடுப்பூசியை அங்கீகரித்துள்ளதாகவும், மற்ற குழுவினர் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனைக்கு பிறகு தான் கோவாக்சின் தடுப்பூசி ஒப்புதல் குறித்து தெரிய வரும் என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடி 157 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளதாகவும், இதனால் நாட்டுமக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கப்பெறும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா பேசியுள்ளார். இதனால் மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரட்டிப்பு பெறும் என்றும் கூறியுள்ளார்.

புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவும், முதன்மை நிலையிலேயே பரிசோதனைகளை வழங்குவதற்காகவும் இந்திய அரசு 1,50,000 ஆயுஷ்மான் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை அமைக்க உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார். புற்றுநோய், சர்க்கரை நோய் குறித்து ஆரம்ப நிலையில் பரிசோதனை செய்ய 1,50,000 சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சுமார் 79,000 மையங்கள் நாட்டில் தொடங்கப்பட்டுள்ளன என்று மாண்ட்வியா கூறினார்.

விலை குறைந்த மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, இந்திய அரசு 8000 ஜன் ஆயுஷதி மையங்களை அமைத்துள்ளதாகவும், 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இத்தகைய கடைகளில் பலன்களைப் பெறுவதாகவும் அவர் மேலும் கூறினார். திங்களன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ரூ. 5,000 கோடி மதிப்பிலான ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் மருத்துவ முன்னெச்சரிக்கை சிகிச்சையில் கவனம் செலுத்தும் என்று கூறினார்.

தற்போதைய சுகாதார உள்கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிரப்ப, ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்திற்கு ரூ.64,000 கோடி செலவிடப்படும் என்று மாண்ட்வியா கூறினார்.

Related Stories:

More
>