மார்த்தாண்டம் அருகே முல்லையாற்றில் பிளாஸ்டிக் ஆலை கழிவுநீர் கலக்கும் அபாயம்-காங். மாவட்ட தலைவர் ஆய்வு

மார்த்தாண்டம் : மார்த்தாண்டம் அருகே புலியூர்சாலை பகுதியில் பிவிசி பைப் தயாரிப்பு நிறுவனம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அங்கு பணிகள் முடிந்து ஆலை திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளது. இந்த ஆலை திறக்கப்பட்டால் இப்பகுதியில் காற்று மாசு ஏற்படுவதோடு, இங்கிருந்து வெளியாகும் கழிவுநீர் அருகில் உள்ள முல்லையாற்றில் கலக்கும் அபாயம் உள்ளதால் ஆலைக்கு இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முல்லையாற்று தண்ணீர் மாங்கோடு, புலியூர்சாலை, மஞ்சாலுமூடு, தேவிகோடு போன்ற கிராமங்களில் குடிதண்ணீராகவும், பிற தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த தண்ணீரில் பிளாஸ்டிக் ஆலை கழிவுகள் கலந்தால் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என மக்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து அறிந்த குமரி மேற்கு மாவட்ட காங். தலைவர் தாரகை கத்பர்ட் அங்கு சென்று கழிவுநீர் ஆற்றில் கலக்கும் சூழலை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், முல்லையாற்று தண்ணீரை சுற்றுவட்டார கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆற்று தண்ணீர் பட்டணம்கால்வாய் வழியாக கடலில் கலப்பதால் கழிவுநீர் கடலில் கலந்து மீன்களுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே இது குறித்து தாசில்தாரிடம் புகார் அளித்துள்ளேன்.

மாங்கோடு ஊராட்சி வழியாக செல்லும் முல்லையாற்றை ஏராளமான மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் இந்த ஆறு இருப்பதையே மறைத்து இந்த தொழில் நிறுவனம் தொடங்க போலி சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அவருடன் மேல்புறம் வட்டார தலைவர் சதீஷ், புலியூர்சாலை பஞ்சாயத்து தலைவர் ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Related Stories:

More
>