கருங்கல் அருகே மீன்லாரியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் பாலிடெக்னிக் மாணவிகள் மயக்கம்

கருங்கல் : கருங்கல் அருகே தொலையாவட்டம் பகுதியில் ஏராளமான வீடுகள், கல்லூரி, அரசு அலுவலகங்கள் போன்றவை உள்ளன. இப்பகுதியில் சமீபகாலமாக தனியாருக்கு சொந்தமான நிலத்தில்  அதிக அளவிலான மீன் பாரம் ஏற்றிச் செல்லும் டாரஸ் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். தற்போது கல்லூரிகள் துவங்கப்பட்டதையடுத்து தொலையாவட்டம் பகுதியில் செயல்படும் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ மாணவியர் நேரடி வகுப்பில் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலையும் வழக்கம் போல் கல்லூரி வகுப்புகள் ஆரம்பமானது. அப்போது அப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த மீன்பாரம் ஏற்றிய லாரியில் இருந்து வந்த துர்நாற்றம் காரணமாக வகுப்புகளில் இருக்க முடியாமல் மாணவ, மாணவியர் அவதியடைந்தனர். ஒரு சில மாணவியருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்பகுதி வழியாக நடந்து சென்றவர்களும், அப்பகுதி வீடுகளில் இருந்தவர்களும் துர்நாற்றம் காரணமாக சுவாசிக்க முடியாமல் அவதியடைந்தனர்.

இதனையடுத்து கல்லூரி நிர்வாகத்தின் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் வட்டாட்சியர் அலுவலகத்திலும், கிள்ளியூர் பேருராட்சி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டது.  இதனையடுத்து கிள்ளியூர் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிள்ளியூர் பேரூராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன் லாரியிலிருந்தும், மீன் லாரிகளை அங்கே வைத்து கழுவுவதாலும் துர்நாற்றம் வீசியது தெரிய வந்தது. இதனையடுத்து கிள்ளியூர் வருவாய் ஆய்வாளர் சம்மந்தப்பட்டவர்களிடம் பேசி மீன்லாரிகளை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.

மேலும் அப்பகுதியில் கிள்ளியூர் பேருராட்சி ஊழியர்கள் பிளீச்சிங் பவுடர்கள் மற்றும் கிருமி நாசினிகளை தெளித்தனர். மேலும் இது போன்று துர்நாற்றம் வீசும் மீன் லாரிகளை கொண்டு வந்து விட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் பல மடங்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் வருவாய் ஆய்வாளர் தெரிவித்தார்.

Related Stories:

More
>