நூற்றுக்கணக்கான ஹெக்டேர் நிலங்களுக்கு நீரூட்டும் பழையாற்றை பாதுகாக்க களமிறங்கிய ‘நம்ம பழையாறு இயக்கம்’-கை கொடுக்கும் நமக்கு நாமே திட்டம்

நாகர்கோவில் : நமக்கு நாமே திட்டத்தில் பழையாற்றை பாதுகாக்க நம்ம பழையாறு என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.நம் நாட்டில் நதிகள் அனைத்தும் ஆன்மீகத்துடன் தொடர்பு உடையது. நதிகளையும் தெய்வமாக வணங்குவது நமது கலாச்சாரம் ஆகும். இதனால் தான் புண்ணிய நதிகள் நிறைந்த நாடாக நமது நாடு விளங்குகிறது. கங்கை, காவிரி, வைகை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி என நதிகளை பெண் தெய்வங்களாக வணங்குகிறோம். எப்படி ஒரு தாய் தனது குழந்தை கருவறையில் உருவானது முதல் பாதுகாக்கிறாளோ, அது போல தான் நதிகளும் கடைசி வரை நம்மை பாதுகாக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் தான் தாய்மைக்கு இணையாக நதிகளை போற்றுகிறோம். இவ்வாறு போற்றப்பட்டு வந்த நதிகள் நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் அழிக்கப்பட்டு புனித தன்மையை இழந்து நிற்கின்றன.

அந்த வகையில் குமரி மாவட்ட கிராமங்களை செழித்தோங்க வைத்து, நூற்றுக்கணக்கான ஹெக்டேர் நிலங்களுக்கு நீருட்டியாக இருந்து, விளை நிலங்களை விளைய வைத்து பலரின் வயிற்று பசியை தீர்த்த பழையாறு பாழ்பட்டு கிடக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி சுருளோடு என்ற இடத்தில் இருந்து ஆறாக பாய தொடங்கி வீரப்புலி, அருமநல்லூர், ஞாலம், சிறமடம், தெரிசனங்கோப்பு, தெள்ளாந்தி, மண்ணடி, ஆண்டிதோப்பு, நங்காண்டி, வீரநாராயணமங்கலம், திருப்பதிசாரம், ஒழுகினசேரி, கோதைகிராமம், ஊட்டுவாழ்மடம், ஆஸ்ரமம், சுசீந்திரம்,  வடக்கு தாமரைக்குளம், பிள்ளை பெத்தான் அணை, மிஷன் அணை, சாமித்தோப்பு வழியாக மணக்குடி கடலில் சங்கமிக்கிறது பழையாறு.

ஒரு காலத்தில் தெளிர்ந்த நீரோடை போல் இங்கு தண்ணீர் பாய்ந்தோடியது. ஏறத்தாழ சுமார் 30, 35 ஆண்டுகளுக்கு முன், பல கோயில்களின் ஆறாட்டு நிகழ்வுகள் நடந்த இடம் பழையாறு தான். ஆனால் காலப்போக்கில் மனித நாகரீகத்தின் வளர்ச்சியால் பரந்து விரிந்து காட்சி தந்த பழையாறு, சுருங்கி போனது மட்டுமல்ல, அழிந்தும் போனது. இவ்வாறு அழிந்து போன பகுதிகள் போக மீதமுள்ள பகுதிகளில் 50 சதவீதம் வரை தற்போது கழிவு நீர் கால்வாயாக மாறி உள்ளது.

சுருக்கமாக சொல்வதென்றால், சென்னையின் கூவம் போல், பழையாறு மாறி உள்ளது. சமீபத்தில் இங்கு நீர்நிலை ஆர்வலர்கள் இயக்கங்களின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 1 கோடி லிட்டர் கழிவு நீர் பழையாற்றில் கலக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இதில் சுமார் 85 லட்சம் லிட்டர் கழிவு நீர் நாகர்கோவிலில் தான் பழையாற்றில் கலக்கிறது.

இவ்வாறு பாழ்பட்டு போன பழையாற்றை பாதுகாக்க வேண்டும். மீண்டும் பழையாற்றை புனித தன்மை நிறைந்ததாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தின்  அடிப்படையில் மேஜர் ஜெனரல் ஐவர் தேவவரம் தலைவராக கொண்டு, நம்ம பழையாறு என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

அரசு பொறுப்புகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள், நுகர்வோர் அமைப்பினர், ஆராய்ச்சியாளர்கள் என பல்வேறு தரப்பினர் இதில் தங்களை இணைத்துள்ளனர்.மாதந்தோறும் இவர்கள் நாகர்கோவிலில் கூடி ஆலோசனை நடத்தி பழையாற்றை எப்படி சீரமைப்பது என்பது பற்றிய திட்ட வரைவு அறிக்கையை தயாரித்து முதற்கட்டமாக அரசுக்கு சமர்பிக்க உள்ளனர்.

பழையாற்றை பாதுகாக்க தவறினால், எதிர்காலத்தில் இப்படியொரு நதி இருந்ததே தெரியாத நிலை ஏற்படும் என இந்த அமைப்பினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு குறிப்பாக அகஸ்தீஸ்வரம், தோவாளை தாலுகாக்களை உள்ளடக்கிய மக்களுக்கு பழையாறு நமக்கு ெசாந்தமானது. நாம் அதை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து தான் நம்ம பழையாறு என்று எங்கள் அமைப்புக்கு பெயர் வைத்து உள்ளோம் என இந்த அமைப்பில் உறுப்பினராக இணைந்துள்ள, நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் ராம் கூறினார்.

இந்த அமைப்பில், இணைந்துள்ள முக்கியமானவர்களில் ஒருவர், கேன்சர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விதுபாலா ஆவார். பழையாற்றில் உள்ள தண்ணீரில் கழிவு நீர் கலப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். பழையாறு பற்றி பல அரிய தகவல்களையும் சேகரித்து வருகிறார். சுற்றுச்சூழல் ஆர்வலர் லால்மோகன், ஓய்வு பெற்ற பேராசிரியர் பீர்முகமது, கிரியேட் அறக்கட்டளை பொன்னம்பலம், குமரி மகா சபா பழனி, ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரி செல்லத்துரை என உயர் அந்தஸ்தில் உள்ளவர்கள் இடம் பெற்று, நம்ம பழையாறு இயக்கத்ைத வலுவானதாக மாற்றி, பழையாற்றை பாதுகாக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.

பல்வேறு கல்லூரிகளில் ஆராய்ச்சி மாணவர்களின் பார்வையும் தற்போது பழையாற்றை நோக்கி திரும்பி இருக்கிறது. குமரி மாவட்டத்தில் இரு போக சாகுபடி நடந்து வருகிறது. தென் மேற்கு பருவமழை, வட கிழக்கு பருவமழை என இரு பருவ காலங்களிலும் மழை பொழியும் மண் குமரி மண். இந்த குமரி மண்ணில் உற்பத்தியாகி, அரபிக்கடலில் கலக்கும் பழையாறு பாதுகாப்பு என்பது நம் அனைவருக்கும் முக்கியமானதாகும்.

அரசு தான் செய்ய வேண்டும் என்பதில்லை. மக்களும், மக்கள் பிரதிநிதிகளும், தன்னார்வலர்களும் இணைந்து தோள் கொடுத்தால் நிச்சயம் வெற்றி காண முடியும் என்பதை நிரூபித்து காட்டுவோம் என்பதே, நம்ம பழையாறு இயக்கத்தின் முக்கிய கொள்கை என அறிவித்துள்ளனர். பழையாற்றை பாதுகாத்து, வருங்கால சந்ததியிடம் அதை நாம் பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டும் என்ற முழக்கத்துடன், தங்களது செயல் திட்டத்தை நம்ம பழையாறு இயக்கத்தினர் ஆரம்பித்துள்ளனர்.

இணைந்து மீட்டெடுப்போம்

நம்ம பழையாறு அமைப்பின் பொது செயலாளர் எஸ். ராமகிருஷ்ணன் கூறியதாவது: ஒவ்வொருவருக்கும் ஆறு நமக்கு சொந்தமானது என்ற உணர்வு வர வேண்டும் என்பதற்காக நம்ம பழையாறு என்று இயக்கத்துக்கு பெயர் வைத்து உள்ளோம். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர், கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாய அமைப்புகள் மற்றும் பழையாற்றின் வழியோர கிராமங்களில் உள்ள அந்தந்த பகுதி மக்கள் ஆகியோரை எல்லாம் ஒருங்கிணைத்து சீரமைப்பு பணியை செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள், உள்ளாட்சி அமைப்பினரும் இதில் இணைக்கப்பட வேண்டும்.

தற்போது தமிழ்நாடு அரசு நமக்கு நாமே என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. சமீபத்தில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தலைமையில் நடந்த கூட்டத்தில் எங்கள் அமைப்பினரும் பங்கேற்றோம். நீர் நிலைகளை புனரமைக்க பொதுமக்களின் பங்களிப்பு 50 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் பழையாறு தொடர்பான சாட்டிலைட் படம் தயாரிக்க போகிறோம். முதலில் எப்.எம்.பி. (Field Measurement Book) தயாரிக்க கள ஆய்வு நடத்த உள்ளோம். அதன் பின்னர் எந்த அடிப்படையில் பணிகளை தொடங்க வேண்டும். முதற்கட்டமாக எவ்வளவு தேவைப்படும். எந்த பணியை முதலில் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி முடிவு செய்வோம். உடனடி தேவையாக கரையோரங்களில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றி பழையாற்றின் கரையை பலப்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை, நாகர்கோவில் மாநகராட்சியின் ஒத்துழைப்புடன் நிச்சயம் பழையாற்றை மீட்டெடுப்போம் என்றார்.

Related Stories:

More
>