திருவாரூரில் தொடர் மழையால் கமலாலய குளம் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது புதுப்பித்து கட்டுவதற்கு நடவடிக்கை-ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் பேட்டி

திருவாரூர் : திருவாரூரில் மழையின் காரணமாக கமலாலய குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த நிலையில் அதனை புதுப்பித்துக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக தியாகராஜ சுவாமி கோயில் இருந்து வருகிறது. கோயில் 5 வேலி, குளம் 5 வேலி மற்றும் ஓடை 5 வேலி என்ற நிலப்பரப்பில் அமையப்பெற்ற இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேராகும். தேரோட்டத்திற்கு பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் இருந்து வரும் கமலாலய குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். 34 ஏக்கர் பரப்பளவை கொண்ட குளமானது திருவாரூர் நகரை சுற்றி இருந்து வரும் பொதுமக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், நகரை சுற்றி 4 புறங்களிலும் 4 சதுர கிலோமீட்டர் தூரத்திற்கு நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையிலும் இருந்து வருகிறது.

இந்த குளத்தை சுற்றி நான்கு புறங்களிலும் மதில் சுவர்கள் உள்ளன. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் மழையின் காரணமாக குளத்தின் மேற்குப் புறத்தில் மதில் சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் பின்னர் அந்த மதில் சுவரானது புதுப்பித்து கட்டப்பட்டது.இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் திருவாரூர் பகுதியில் கனமழை பெய்த நிலையில் இந்த குளத்தின் தெற்கு புறத்தில நகராட்சி அலுவலகம் எதிரே மதில் சுவரானது சுமார் 100 அடி தூரத்திற்கு திடீரென இடிந்து குளத்தின் உள்பகுதியில் விழுந்தது. இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதன் காரணமாகவும், குளத்திற்கு உள்பகுதியில் மதில் சுவர் இடிந்து விழுந்ததன் காரணமாகவும எவ்வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை.

இதனையடுத்து நேற்று காலை மதில் சுவர் இடிந்த பகுதியினை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், குளத்தில் மதில்சுவரானது நீண்ட வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டதன் காரணமாக தற்போது சேதம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு முன்பு 2 முறை வெவ்வேறு பகுதியில் இந்த மதில் சுவர் இடிந்து புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இடிந்துள்ள சுவரை புதுப்பித்து கட்டுவதற்கான நிரந்தர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும் மதில்சுவர் கட்டப்படும் வரையில் தற்காலிகமாக தடுப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

மேலும் இந்த வழியாக செல்லும் மின் இணைப்புகள் மாற்று வழியில் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் குளத்தை சுற்றி கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் குளத்தின் உள்ளே மருத்துவமனை கழிவுகள் உள்ளிட்ட எந்த ஒரு கழிவுகளும் கலக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். கலெக்டர் ஆய்வின் போது நாகை எம்பி செல்வராசு சேதமடைந்த பகுதியை பார்வையிட்டார். இந்நிலையில் சேதமடைந்த கமலாலய குளத்தின் சுற்றுச்சுவர் பகுதியை பார்வையிட அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  இன்று வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

Related Stories: