மஞ்சூர் அருகே கெத்தை நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி

மஞ்சூர் : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. இப்பகுதியில் நீர் மின்நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. கெத்தையில் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட பலதரப்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். கடந்த 1990ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி கெத்தை பகுதியில் வரலாறு காணத வகையில் கனமழை பெய்தது. அப்போது மின்வாரிய குடியிருப்பை ஒட்டிய மலை உச்சியில் பலத்த நீர் இடி தாக்கியது. இதில் பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டு மலையுச்சியில் இருந்து ராட்சத பாறைகள் உருண்டு அடிவாரத்தில் இருந்த மின்வாரிய குடியிருப்புகளின் மீது விழுந்தது.

அதிகாலை ஏற்பட்ட இந்த சம்பவத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. மேலும் வீடுகளில் உறங்கி கொண்டிருந்த குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியும், மண்ணில் புதையுண்டும் இறந்து போனார்கள். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக மின்வாரியத்தின் சார்பில் கெத்தை பகுதியில் நினைவு தூண் அமைக்கப்பட்டது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் கெத்தை மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த நினைவு தூணுக்கு சென்று அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த துயர சம்பவம் நிகழ்ந்து 30 ஆண்டுகள் கடந்தநிலையில் 31ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று கெத்தையில் நடைபெற்றது. கெத்தை மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் பழனிகுமார், அருள்விக்டர், உதவி பொறியாளர் ரமேஷ்குமார், சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் அபுதாலிப், தண்டபாணி, முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், கோபாலகிருஷ்ணன், மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் கெத்தை, மாயாபஜார் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட தூணுக்கு மாலைகள் அணிவித்து மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்கள்.

ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் இந்த நிகழ்வில் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் இந்தாண்டு கொரோனா தாக்கம் காரணமாக இறந்தவர்களின் உறவினர்கள் ஒரு சிலர் மட்டுமே பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: