திருவண்ணாமலை பகுதியில் உள்ள ஏரிகளில் உபரி நீர் வெளியேறுவது படிப்படியாக குறைகிறது-குடியிருப்பு பகுதியில் வெள்ளம் வெளியேற்றும் பணி தீவிரம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை பகுதியில் உள்ள ஏரிகளில் உபரிநீர் வெளியேற்றம் படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும், குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழை வெள்ளத்தை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடக்கிறது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவும் பரவலான மழை பெய்தது. அதன்படி, செங்கத்தில் 31.80 மி.மீ, ஜமுனாமரத்தூரில் 2 மி.மீ, வந்தவாசியில் 5.20 மி.மீ, போளூரில் 27.20 மி.மீ, கீழ்பென்னாத்தூரில் 1.40 மி.மீ, வெம்பாக்கத்தில் 11 மி.மீ மழை பதிவானது.

திருவண்ணாமலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை மழையில்லை. எனவே, இந்த பகுதியில் உள்ள வேங்கிக்கால், சோ.நாச்சிப்பட்டு, நொச்சிமலை, கீழ்நாத்தூர் ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் படிப்படியாக குறைந்திருக்கிறது. வேங்கிக்கால் ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீர் கட்டுக்குள் வந்ததால், கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம் நேற்று வடித்துவிட்டது.

எனவே, 2 நாட்களுக்கு பிறகு அந்த பகுதியில் வழக்கமான போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் 2 நாட்களாக மழைநீர் தேங்கியதால், அறிவியல் பூங்காவை ஓட்டி 10 மீட்டர் தூரம் பொதுமக்களுக்காக போடப்பட்ட நடைபாைத சேதமாகி உள்வாங்கியது.ஏரிகளில் இருந்து கால்வாய்களில் வழியாக வெளியேறும் தண்ணீரில் பொதுமக்கள் நேற்றும் மீன்களை பிடித்தனர். ஆனாலும், திண்டிவனம் சாலையில் உள்ள கஜலட்சுமி நகர், வீனஸ் நகர், சுபலட்சுமி நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. சாலையில் இருந்து தாழ்வான பகுதியில் இந்த குடியிருப்பு பகுதிகள் அமைந்திருப்பதால், வெள்ளம் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

மேலும், வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து அவற்றை வெளியேற்றுவதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இது தொடர்பாக, அதிகாரிகளுடன் நேற்று கலெக்டர் முருகேஷ் ஆய்வு நடத்தினார். முற்றிலுமாக மழை வெள்ளம் வடியும் வரை தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், இன்று முதல் வடகிழக்கு பருவமழை ெதாடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளில் முழுமையாக நிரம்பியுள்ள ஏரிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என ஊரக வளர்ச்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: