கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகள் தர்ணா போராட்டம்-கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பு

திருவண்ணாமலை : ஆரணி அருகே தாயை கொலை செய்துவிட்டு, தந்தை தற்கொலை செய்துகொண்டதால் ஆதரவற்று தவிக்கும் குழந்தைகள், பெற்றோரின் இறப்புக்கு காரணமான கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று டிஆர்ஓ முத்துகுமாரசாமி தலைமையில் நடந்தது. அதில், சமூக பாதுகாப்பு திட்டதனித்துணை ஆட்சியர் வெங்கடேசன், கோட்டாட்சியர் வெற்றிவேல் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், பட்டா மாற்றம், சுய தொழில் கடனுதவி, தாட்கோ கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 347 பேர் மனு அளித்தனர். அதன்மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஆர்ஓ உத்தரவிட்டார்.

மேலும், கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து, துறைவாரியாக ஆய்வு நடத்தப்பட்டது. நிலுவையில் உள்ள மனுக்கள் மீது 15 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், ஆரணி அடுத்த ஆகாரம் கிராமத்தில், மூர்த்தி என்பவர் தன்னுடைய மனைவி கலைச்செல்வியை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை ெசய்துகொண்டார். அந்த சம்பவத்தால், ஆதரவற்று தவிக்கும் அவர்களுடைய மகள் யோகேஸ்வரி(16), ஹேமமாலினி(9), மகன் கவுரி சங்கர்(7) ஆகியோர், தங்களுடைய பாட்டியுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தன்னுடைய தந்தைக்கு சொந்தமான நிலத்தை கந்துவட்டி கும்பலைச் சேர்ந்த இரண்டு பேர் அபகரித்துவிட்ட விரக்தியில், தாயை கொன்றுவிட்டு, தந்தையும் தற்கொலை செய்துகொண்டார் என அவர்கள் தெரிவித்தனர். தாயும், தந்தையும் இறந்த நாளன்று, இது ெதாடர்பாக போலீசில் புகார் தெரிவித்தோம், அப்போது, நிலத்தை மீட்டுத்தருவதாகவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிலத்தையும் மீட்டுத்தரவில்லை. அதோடு, கந்துவட்டி கும்பலை சேர்ந்தவர்கள் தொடர்ந்து எங்களையும் மிரட்டுகின்றனர் என பெற்றோரை இழந்த யோகேஸ்வரி கண்ணீருடன் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சமரசப்படுத்தினர். பின்னர், அதிகாரிகளிடம் அழைத்து சென்றனர். யோகேஸ்வரியிடம் இருந்து மனுவை பெற்றுக்கொண்ட டிஆர்ஓ முத்துகுமாரசாமி, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Related Stories: