பஸ் படிக்கட்டில் நின்றபடி பயணம் தட்டிக்கேட்ட அரசு டிரைவரிடம் மாணவர் வாக்குவாதம்-வேலூர் அண்ணாசாலையில் பரபரப்பு

வேலூர் : வேலூர் அண்ணாசாலையில் பஸ் படிக்கட்டில் நின்றபடி பயணம் மேற்கொண்ட மாணவர்களை தட்டிக் கேட்ட அரசு டிரைவரிடம் மாணவன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் தற்போது 9ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வருகிற 1ம் தேதி முதல் 6ம் வகுப்பு முதலான பள்ளிகள் திறக்கப்பட்ட உள்ளது. இந்நிலையில் நேற்று வேலூர் அண்ணா சாலையில் பாகாயம் நோக்கி சென்ற அரசு நகர பஸ்சில் பள்ளிக்கு பயணித்த மாணவர்கள் ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்துள்ளனர்.

இதனால் சாலையோரம் இருந்த தக்காளி கூடை மீது மாணவர்களின் கால் பட்டதில் தக்காளி கீழே கொட்டியுள்ளது. இதை பஸ்சின் பக்கவாட்டு கண்ணாடி மூலம் பார்த்த பஸ் டிரைவர் பஸ்சில் படிக்கட்டில் பயணம் செய்து கொண்டு இருந்த மாணவர்களை உள்ளே வரும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் மாணவர்கள் தொடர்ந்து பஸ்சில் தொங்கியபடியே வந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை ராஜா தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் நிறுத்திவிட்டார்.

இதையடுத்து கீழே இறங்கி வந்த டிரைவர் மாணவர்களை உள்ளே செல்லுங்கள், இல்லை கீழே இறங்கி செல்லுங்கள் என்று கூறினார். அதற்கு ஒரு பள்ளி மாணவர் பஸ் ்டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பஸ் டிரைவர் கூறுகையில், ‘பஸ்சின் உள்ளே இடம் இருந்தும் மாணவர்கள் ஆபத்தை உணராமல் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதாகவும் இதை கேட்டால் தங்களையே திட்டுவதாகவும் வேதனையுடன் கூறினார்.

இவர்களுக்கு எதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் நாங்கள் தானே பொறுப்பாக முடியும்’ என்றார். இதற்கிடையே  தகவலறிந்த தெற்கு போலீஸ்காரர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தார். இதைப்பார்த்த பயணிகளும் பஸ் டிரைவர்  எவ்வளவோ கேட்டுக்கொண்டும் மாணவன் உள்ளே வர முடியாது என்று அடம்பிடித்ததாக  போலீஸ்காரரிடம் தெரிவித்தனர். அந்த பள்ளி மாணவனை அழைத்து பஸ்சின் உள்ளே சென்று பயணம் செய்யுமாறு போலீஸ்காரர் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். இதையடுத்து பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் வேலூர் அண்ணாசாலை பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: