களை கட்டிய பண்டிகை கொண்டாட்டம் ஓசூர் ரோஜாவுக்கு மவுசு அதிகரிப்பு-விலை உயர்வால் சாகுபடியாளர்கள் மகிழ்ச்சி

ஓசூர் : விசேஷ காலங்கள் துவங்கியுள்ளதால், ரோஜா மலர்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால், சூர் பகுதியில் ரோஜா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மகாளய அமாவாசைக்கு முன்னதாக தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அந்த கால கட்டத்தில் பொதுமக்கள் வீடுகளில் சுப நிகழ்ச்சிகள் ஏதும் செய்யாததால், ரோஜா உள்ளிட்ட மலர்களின் தேவை குறைந்து விலை வீழ்ச்சியடைந்தது. குறிப்பாக ரோஜா மலர்களின் விலை அதல பாதாளத்தில் தள்ளப்பட்டது. ஒரு ரோஜா மலர் 2 ரூபாய்க்கும், 20 மலர்கள் கொண்ட ஒரு கட்டு 40 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

இதனால், மலர் சாகுபடியாளர்கள் பெருத்த நஷ்டமடைந்தனர். பறித்த மலர்களை குப்பைகளில் கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மகாளய அமாவாசை முடிந்த நிலையில் அடுத்தடுத்து விசேஷ காலங்கள் துவங்கி உள்ளது. ஆயுதபூஜை, விஜயதசமி, நவராத்திரி முடிந்து தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் போகி, மகா சங்கராந்தி உள்ளிட்டவை அடுத்தடுத்து வருவதால் ரோஜா உள்ளிட்ட அனைத்து மலர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், விலையும் அதிகரித்து வருகிறது. தற்போது, ஒரு ரோஜா மலர் 6 ரூபாய்க்கும், ஒரு கட்டு 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், ஓசூர் பகுதியைச் சேர்ந்த ரோஜா சாகுபடியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘ஓசூர் பகுதியில் மலர் சாகுபடிக்கு தேவையான இதமான சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. இதனால், ஆண்டு முழுவதும் மலர் உற்பத்தி நடைபெற்று வருகிறது. வெளிநாட்டு தொழில்நுட்பங்களுடன் குடில் அமைத்தும், திறந்த வெளியிலும் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். இங்கிருந்து இங்கிலாந்து, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ரோஜா ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா கால கட்டத்தின்போது ஏற்றுமதி பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது நிலைமை சீரடைந்துள்ளது. மேலும், உள்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள் வரிசை கட்டி வருவதால் விலை உயர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது,’ என்றனர்.

Related Stories: