ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திறந்தவெளி ஆழ்துளை கிணறுகள் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்-வாராந்திர கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திறந்தவெளி ஆழ்துளை கிணறுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும், என்று வாராந்திர ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் அரசுத்துறை அதிகாரிகளுக்கான வாராந்திர ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:

வாரந்தோறும் நடைபெறும் அனைத்துதுறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் ஒரு துறையில் இருந்து மற்றொரு துறை மூலம் கிடைக்க வேண்டிய ஒப்புதல் அறிக்கைகள், மற்ற பணிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை துரிதப்படுத்த இக்கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும். அடுத்த வாரம் நடைபெறும் கூட்டத்தில் அதற்கான மேல் நடவடிக்கைகள் சரிபார்க்க முடியும். இப்பணிகளை வாரந்தோறும் விவாதிக்க வேண்டும்.

கிராமம் மற்றும் நகர்ப் பகுதிகளில்  பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைக்கு அலுவலர்களால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் குப்பைகள் சாலை ஓரங்கள், நீர்நிலைகளில் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் ஒழிப்பு பணிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவை மிக கவனமாக கண்காணிக்கப்படும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திறந்தவெளி ஆழ்துளை கிணறுகள் குறித்து அய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுப்படுத்த மத்திய சுகாதார பணியாளர்கள் நாளை(இன்று) முதல் டெங்கு பாதித்த பகுதிகளில், ஏழு வட்டாரங்களிலும் டெங்கு கொசு உற்பத்தி, ஒழிப்பு பணி வழிகாட்டுதல்களை தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

வார நாட்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும். வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் விவரங்களை சேகரிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை தடுப்பூசி செலுத்துக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்.  நடமாடும் வாகனங்கள் மூலம் வீட்டிற்கு சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும். சாலை விபத்துகளை குறைக்க வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் இணைந்து சாலை விபத்துகள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட வழங்கல் துறையின் மூலம் ரேஷன் கார்டு வழங்கும் பணிகளை வேகப்படுத்த வேண்டும்.  மாவட்டம் முழுவதும் 97 ஆயிரம் நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை முறையான நபர்களுக்கு வழங்கப்படுகிறதா என்பதை வருவாய்த்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியற்ற நபர்களுக்கு உதவித்தொகை வழங்குவதை நிறுத்த வேண்டும்.

அதேபோல், மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணிகளை 6 வட்டங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து அடையாள அட்டைகள் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரக்கோணம் வட்டத்தையும் சேர்த்து மாவட்டத்தில் இரண்டு இடங்களில் அடையாள அட்டை வழங்கும் முகாம் நடத்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளை வாரந்தோறும் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில், டிஆர்ஓ ஜெயசந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, நேர்முக உதவியாளர் சுரேஷ்குமார் மற்றும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: