டி20 உலகக்கோப்பையில் இன்று இரண்டு போட்டிகள்: பாகிஸ்தானுடன் நியூசிலாந்து மோதல்

துபாய்: 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. தென்னாப்ரிக்காவுடன் மேற்கிந்திய தீவுகளும் நியூஸிலாந்துடன் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நிகழ்த்துகின்றன. ஏழாவது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. குரூப் 1, குரூப் 2 என இரண்டு பிரிவாக ரவுண்ட் ட்ராப்பிங் லீக் அடிப்படையில் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு துபாயில் நடைபெறும் குரூப் 1 லீக் போட்டியில் தென்னாப்ரிக்காவை எதிர்த்து மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்குகிறது. இவ்விரு அணிகளும் தத்தமது முதலாவது ஆட்டத்தில் தோல்வியை தழுவின. எனவே இரண்டாவது லீக்கிலும் தோல்வியுறும் அணிக்கு நாக்அவுட் வாய்ப்பு மங்கிவிடும் என்பதால் வரிந்து கட்டி விளையாடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதேபோன்று சார்ஜாவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் குரூப் 2 லீக் போட்டியில் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானை நியூசிலாந்து அணி எதிர்கொள்கிறது. பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடிய உற்சாகத்தில் உள்ளது. இந்த நிலையில் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்தையும் வெல்லும் பட்சத்தில் அரையிறுதி சுற்று வாய்ப்பு பாகிஸ்தானுக்கு பிரகாசம் அடைந்துவிடும். மொத்தமாக இரு அணிகளும் சம பலத்துடன் திகழ்வதால் இன்று இரவு ரசிகர்களுக்கு விருந்து நிச்சயம்.

Related Stories: