தென் மாவட்டங்களில் ஒரு வாரகால சுற்றுப்பயணத்தை தொடங்கினார் சசிகலா!: ஆரத்தி எடுத்து வழி அனுப்பிய ஆதரவாளர்கள்..!!

சென்னை: சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக அந்த கட்சியில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக ஒரு வாரகால அரசியல் சுற்றுப்பயணத்தை சசிகலா தொடங்கியுள்ளார். மதுரையில் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள் என்றார். அவரின் இந்த கருத்தால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று உறுதிபட கூறியுள்ளார்.

இதனால் அதிமுகவில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டிருக்கும் நிலையில், சசிகலா கட்சி தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்ட ஒரு வாரகால அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்ட அவருக்கு ஆதரவாளர்கள் ஆரத்தி எடுத்து வழி அனுப்பி வைத்தார்கள். தஞ்சாவூர் செல்லும் வழியில் சசிகலா 25 இடங்களில் தொண்டர்களை சந்திக்கிறார். தஞ்சையில் இன்று இரவு தங்கும் சசிகலா, நாளை டிடிவி தினகரன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 28ம் தேதி மதுரை செல்லும் சசிகலா, முத்துராமலிங்க தேவர் மற்றும் மருது சகோதரர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.

29ம் தேதி ராமநாதபுரத்தில் தொண்டர்களை சந்திக்கிறார். 30ம் தேதி காலை பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையில் பங்கேற்கும் சசிகலா, அன்றைய தினமே தஞ்சை திரும்புகிறார். நவம்பர் 1ம் தேதி தஞ்சையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் சசிகலா, ஆதரவாளர்களை சந்திக்கிறார். இதன்பின்னர் திருநெல்வேலி உள்பட மேலும் சில மாவட்டங்களுக்கும் அவர் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் சசிகலாவின் இந்த ஒரு வார கால அரசியல் சுற்றுப்பயணம் தொண்டர்களிடம் பெரும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More
>