×

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதன் 'மாதாந்திர ரிப்போர்ட் கார்டு''வழங்குவதை உறுதி செய்யுங்கள் : முதல்வர் ஸ்டாலினுக்கு கமல் கோரிக்கை!!

சென்னை: தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதன் மாதாந்திர ரிப்போர்ட் கார்டு வழங்குவதை உறுதிசெய்யுங்கள் என முதல்வர் ஸ்டாலினுக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 2021 சட்டசபை தேர்தலில், தமிழக மக்களுக்கு தி.மு.க., 905 வாக்குறுதிகளை அளித்திருந்தது. அவற்றில் இன்றுவரை நிறைவேற்றப்படாத மிக முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றை இப்போது கவனத்திற்கு கொண்டு வருகிறேன். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் 491வது வாக்குறுதி, திட்டங்கள் செயலாக்கம் என்கிற புதிய அமைச்சகம் ஏற்படுத்தப்படும் எனச்சொல்கிறது.

தி.மு.க., அரசு பதவியேற்று இன்றுடன் 173 நாட்கள் ஆகியுள்ளன. இதுவரை 200 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் மீடியாக்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு கூட்டங்களில் தெரிவித்து வருகிறார். ஆனால், திட்டங்கள் செயலாக்க அமைச்சகம் அமைக்கப்படும் மற்றும் மாதந்தோறும் ஊடகங்களிடம் ரிப்போர்ட் கார்டு வழங்கப்படும் என்ற முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதி இதுவரை செயல்படுத்தப்படவில்லை.

வரும் நவ.,1ம் தேதி மாதத்தின் முதல் பணி நாளாகவே அமைகிறது. அந்த நாளுக்கு வேறொரு வரலாற்று முக்கியத்துவமும் உண்டு. அந்நாளில்தான் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இந்தச்சிறப்பு மிக்க நாளில் இருந்து மேற்குறிப்பிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ரிப்போர்ட் கார்டினை ஊடகங்களுக்கு வழங்கும் வாக்குறுதியை நிறைவேற்ற ஆவண செய்ய வேண்டும் என முதல்வரை கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags : Kamal ,Chief Minister ,Stalin , மக்கள் நீதி மய்யம்
× RELATED விமான நிலையங்களின் விரிவாக்கம் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை