×

அதிமுகவை சேர்ந்தவர் தலைவர், நிர்வாகிகளாக உள்ள கூட்டுறவு பண்டக சாலையில் பல கோடி ரூபாய் மோசடி: மாநில பதிவாளரிடம் தொமுச புகார்

சிவகங்கை: அதிமுகவை சேர்ந்தவர் தலைவர், நிர்வாகிகளாக உள்ளன சிவகங்கை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் (பாம்கோ) பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை (பாம்கோ) பணியாளர்கள் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில், கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளருக்கு அனுப்பியுள்ள மனு: சிவகங்கையில் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை (பாம்கோ) செயல்பட்டு வருகிறது. இதன் வருமானம் மற்றும் அரசு மானியம் மூலம் கிடைத்த தொகையில் ரூ.7 கோடி வரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மற்றும் இளையான்குடி நகர கூட்டுறவு வங்கியில் பிக்சட் டெபாசிட் போடப்பட்டிருந்தது. இத்தொகையில் ரூ.4.5 கோடியை எடுத்து மோசடி செய்துள்ளனர். மாநில பதிவாளரின் அனுமதி பெற்றே ரேஷன் கடைகளுக்கு வழங்க ஒரு குறிப்பிட்ட பிராண்ட் சேமியா கொள்முதல் செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால் அவ்வாறு செய்யாமல் தரம் குறைவான சேமியாவை மாநில பதிவாளரின் அனுமதி இல்லாமல் கொள்முதல் செய்துள்ளனர். இதில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு தரமில்லாத பட்டாசுகள் கொள்முதல் செய்யப்படுகிறது. பாம்கோவின் கீழ் லைசென்ஸ் பெற்றுள்ள கடைகளில் மட்டுமே பட்டாசு விற்பனை செய்ய வேண்டும். ஆனால் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பட்டாசு கிப்ட் பாக்ஸ்களை அனுப்பி விற்பனை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறது. அவை விற்பனையாகாமல் இருந்தாலும் அதற்கான பணத்தை கட்டாயம் விற்பனையாளர்கள் கட்ட வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். எனவே பண்டகசாலையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர். பண்டகசாலையில் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளில் பலர் அதிமுகவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : AIADMK ,Tomusa , AIADMK, fraud
× RELATED சொன்னத எப்போ செஞ்சி இருக்காங்க… பாஜ...