பசும்பொன் குருபூஜையை முன்னிட்டு தேவர் சிலைக்கு தங்கக்கவசம்

சாயல்குடி:  பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டது.  ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் அருகே முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு 2014ல் அதிமுக சார்பில் 13.5 கிலோ எடையுள்ள தங்கக்கவசம் ஜெயலலிதாவால் அணிவிக்கப்பட்டது. ஆண்டுதோறும் அக். 30ம் தேதி நடக்கும் குருபூஜை விழாவில் இந்த தங்கக்கவசம் அணிவிக்கப்படும். இந்தாண்டு 114ம் ஆண்டு ஜெயந்தி விழாவும், 59ம் ஆண்டு குருபூஜை விழாவும் அக். 28 முதல் 30ம் தேதி வரை நடக்கிறது.

இதையடுத்து, தங்கக்கவசத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் வங்கியில் இருந்து நேற்று காலை பெற்று, தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் ஒப்படைத்தார். பின்னர் பசும்பொன் நினைவிடத்திற்கு கொண்டு வரப்பட்டது.  தங்கக்கவசம் முன்னாள் அமைச்சர் உதயகுமார், அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகியோர் முன்னிலையில் தேவர்சிலைக்கு அணிவிக்கப்பட்டது. குருபூஜை விழா அக். 30ம் தேதி முடிந்ததும் ஒருநாள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு மீண்டும் மதுரையில் உள்ள வங்கிக்கு கொண்டு செல்லப்படும்

Related Stories: