தேர்தல் அதிகாரி காரை மறித்து ரகளை: அதிமுக நிர்வாகிகள் 4 பேர் கைது: மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் கைதாகிறார்

கரூர்: கரூரில் தேர்தல் அதிகாரி காரை மறித்து ரகளையில் ஈடுபட்ட வழக்கில் அதிமுக நிர்வாகிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜபாஸ்கரும் கைதாவார் என தெரிகிறது. கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி 8வது வார்டுக்கான இடைத்தேர்தல் கடந்த 9ம்தேதி நடந்தது. அதனைத்தொடர்ந்து 12ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் திமுகவை சேர்ந்த கண்ணையன் வெற்றி  பெற்றார். இதனால் கரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களில் திமுகவின்  எண்ணிக்கை 4ஆக உயர்ந்தது. கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக அதிமுகவை  சேர்ந்த கண்ணதாசன் உள்ளார். இந்நிலையில் கரூர் மாவட்ட ஊராட்சி  துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகத்தில் கடந்த 22ம் தேதி தேர்தல் அதிகாரியும், திட்ட இயக்குனருமான மந்திராச்சலம் தலைமையில்  நடப்பதாக இருந்தது. இதற்காக திமுக, அதிமுகவை சேர்ந்தவர்கள்  அதிகளவில் கூடியிருந்ததால் மறைமுக தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை  ஏற்பட்டது.

இதனால் துணைத்தலைவர் தேர்தலை ஒத்தி வைத்து விட்டு தேர்தல் அதிகாரி மந்திராசலம் காரில் புறப்பட்டார். அப்போது முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில்  100க்கும் மேற்பட்ட அதிமுகவினர், திட்ட இயக்குநர் மந்திராச்சலம்  காரை மறித்து ரகளையில்  ஈடுபட்டனர்.

இதுகுறித்து தேர்தல் அதிகாரி மந்திராச்சலம் தாந்தோணிமலை போலீசில்  புகார் செய்தார். அதன்பேரில் முன்னாள் அமைச்சர்  எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட 15 பேர் மீது அரசு பணியை தடுத்தது,  கொலை மிரட்டல் விடுத்தது,  சட்டவிரோதமாக ஒன்று கூடியது, தகாத  வார்த்தைகளால் திட்டியது, சொத்தை சேதப்படுத்தியது உள்ளிட்ட 6  பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அனைவரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை தாந்தோணிமலை போலீசார் அதிமுகவை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் திருவிகா, இவரது மகன் ஒன்றிய கவுன்சிலர் தமிழ்செல்வன், கரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், செல்லாண்டிபாளையம் வார்டு செயலாளர் சுந்தர் ஆகிய 4 பேரை அவர்களது வீட்டில் அதிரடியாக கைது செய்தனர். கைதான 4 பேரையும் கரூர் சிஜேஎம் 1ல் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை நவம்பர் 8 வரை காவலில் வைக்க நீதிபதி அம்பிகா உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொத்துகுவிப்பு வழக்கு தொடர்பாக நேற்று சென்ைன, ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவர் கரூர் திரும்பியதும் இந்த வழக்கில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: