முகநூல் பதிவில் பெரியாறு அணை குறித்து சர்ச்சை: நடிகர் பிருத்விராஜுக்கு கடும் கண்டனம்: தமிழக விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு

கம்பம்: பெரியாறு அணை குறித்து நடிகர் பிருத்விராஜ், முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்துள்ளார். இதற்கு தமிழக விவசாயிகள், பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த 23ம் தேதி மாலை 136 அடியாக உயர்ந்ததையடுத்து, தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், இடுக்கி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பிக்கு முதல் தகவல் கொடுத்தனர். இந்நிலையில், அணையின் பலம் குறித்து, இரு மாநில மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தக்கூடிய வதந்திகளை கேரளாவைச் சேர்ந்த சிலர், சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் பிருத்விராஜ் தனது முகநூல் மற்றும் சமூக வலைத்தள பக்கங்களில், ‘‘உண்மைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் எதுவாக இருந்தாலும், 125 ஆண்டு பழமையான அணை இன்னும் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை. அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சரியானதைச் செய்ய வேண்டிய நேரம் இது. ‘‘Decommission Mullaperiyaar Dam(முல்லைபெரியாறு அணையை இடிக்க வேண்டும்)’’ சரியான முடிவை எடுக்க பிரார்த்திப்போம்...’’ என சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த கருத்து தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், ‘‘பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, 2011ல் மிகப்பெரும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது கூட கேரள நடிகர்கள் யாரும் இதுகுறித்து பேசவில்லை. பெரும்பாலான கேரள நடிகர்களுக்கு முகவரி சென்னைதான். அந்த அளவிற்கு தமிழகத்தோடு ஒன்றிப் போனவர்கள். கேரள திரைத்துறையைச் சேர்ந்த அனைவரும் மொழி என வந்தால், தமிழுக்கும், மலையாளத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இந்நிலையில், கேரள திரையுலகத்தை சேர்ந்த நடிகர் பிருத்விராஜ் பெரியாறு அணை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. ஒரு கலைஞனுக்கு மொழி, இனம், நாடு என்ற எல்லை கிடையாது. அவர்கள் பொதுமக்களை மகிழ்விக்க கூடியவர்கள்,  சமூகத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் பொதுவானவர்கள். இதையெல்லாம் தாண்டி, கேரள திரைத்துறையின் கவனம் பெரியாறு அணைப் பக்கம் திரும்பி இருப்பது வருத்தத்திற்குரியது. மக்களை ஒன்றுபடுத்த வேண்டிய ஒரு கலைஞன், மக்களைப் பிரிப்பது  வேதனைக்குரியது.

பெரியாறு அணை தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம். ஒரு கலைஞன் தனக்கு ஒரு வட்டத்தை உருவாக்காமல், பொதுவாக இருப்பதுதான் அவருக்கும், சமூகத்திற்கும் நல்லது. இதை நடிகர் பிருத்விராஜ் உணர வேண்டும். முகநூலில் கருத்து பதிவிட்டதற்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். உருவப்படம் எரிப்பு: அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேனி மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள், சர்ச்சை கருத்து பதிவிட்ட நடிகர் பிருத்விராஜை கண்டித்து, தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவரது உருவப்படத்தை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். இதையடுத்து அவர்கள், கலெக்டர் முரளிதரனைச் சந்தித்து அளித்த மனுவில், ‘‘பெரியாறு அணையின் பலம் குறித்து கேரளாவைச் சேர்ந்த ரசூல்ராய், கேரள நடிர் பிருத்விராஜ் ஆகியோர் வீண் வதந்தியை பரப்பி வருகின்றனர். இவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய, தமிழக போலீசார் பெரியாறு அணை கண்காணிக்க வேண்டும்’’ என கூறியுள்ளனர்.

திசை திருப்பப்படுகிறதா?

கேரளாவில் நிலச்சரிவால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெரியாறு அணையில் இருந்து அதிக நீரை தமிழகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என அம்மாநில முதல்வர் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி இருப்பது பிரச்னையை திசை திருப்பும் முயற்சியா என நடுநிலையாளர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

‘‘தமிழகத்திடம் கேரளா பாடம் கற்க வேண்டும்’’ ‘‘கடந்த சில தினங்களுக்கு முன், கேரள மாநிலத்தில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால், கோட்டயம் மாவட்டம், கூட்டிங்கல், இடுக்கி மாவட்டம் கொக்கையாறு ஆகிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதைப் பார்த்த திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்டோருக்கு வருத்தம் தெரிவித்ததுடன், திமுக சார்பில் ரூ.1 கோடியை தாயுள்ளத்தோடு வழங்கினார். ஆனால், கேரளாவைச் சேர்ந்தவர்கள் இப்படி ஒரு துயரமான சூழலிலும் பெரியாறு பிரச்னையை கிளப்பி ஆதாயம் தேட முயல்கின்றனர். அவர்கள் தமிழகத்திடமிருந்து பாடம் கற்க வேண்டும்’’ என விவசாயிகள் தெரிவித்தனர்.

‘‘பெரியாறு வலுவானது’’ஒன்றிய அரசு அபிடவிட்

சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் பெரியாறு அணை பிரச்னை தொடர்பான வழக்கில், பெரியாறு அணை மிகவும் வலுவாக உள்ளது என ஒன்றிய அரசு ‘‘அபிடவிட்’’ தாக்கல் செய்துள்ளது. இது கேரளாவுக்கு பின்னடைவாகும். தமிழகத்தின் கருத்துக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. இதனால், மீண்டும் பெரியாறு பிரச்னையை கிளப்புகிறார்களா என சந்தேகம் எழுந்துள்ளது.

Related Stories: