சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 50 சதவீத செல்ல பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தவில்லை: ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆய்வில் தகவல்

சென்னை: ரேபிஸ் தொற்றிலிருந்து செல்லப் பிராணிகளையும், மனிதர்களையும் காப்பதற்கு ஒரே வழி தடுப்பூசி மட்டும் தான். நாய்களை பொருத்தவரை பிறந்த முதல் ஆண்டில் இரு முறை ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். அதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் ஒரு முறை அந்த தடுப்பூசியை செலுத்த வேண்டியது அவசியம். ஆனால், பெரும்பாலானோர் இந்த தடுப்பூசியை தங்களது செல்லப் பிராணிகளுக்கு முறையாக செலுத்துவதில்லை. இந்நிலையில், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நோய் பரவியல் துறை சார்பில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் வெறிநாய் கடி மற்றும் ரேபிஸ் தடுப்பூசி தொடர்பான ஆய்வு, மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயந்தி கண்காணிப்பில் நடத்தப்பட்டது.

இதில், செல்லப் பிராணிகள் வளர்ப்போர் மற்றும் தெரு நாய்களுக்கு ஆதரவளித்து வளர்ப்போர் என மொத்தம் 223 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 50 சதவீத வளர்ப்பு நாய்களுக்கு இதுவரை ரேபிஸ் தடுப்பூசி செலுத்தவில்லை என்பது தெரியவந்தது. இதைத்தவிர, நாய் கடிக்குள்ளான 157 பேர் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். அவர்களில் 62 சதவீதம் பேரை கடித்த நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்பதும் தெரிந்தது. அதுமட்டுமல்லாது நாய்க் கடிக்குள்ளான 22 சதவீதம் பேர் ரேபிஸ் தடுப்பூசியை முறையாக செலுத்திக் கொள்ளவில்லை என்பதும் தெரிந்தது.

மேலும், நாய் கடித்தவுடன் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் மற்றும் ரேபிஸ் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு நாய் வளர்ப்போரிடத்தில் மேம்பட்டிருப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. அதில் அதிகபட்சமாக ஆலந்தூர் மண்டலத்தில் 172 தெரு நாய்களும், அடையாறில் 153 நாய்களும், திருவொற்றியூரில் 146 நாய்களும், வளசரவாக்கம் மண்டலத்தில் 47 தெருநாய்களும் இருப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

Related Stories:

More
>