காவலர் அங்காடிகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்ய விருப்பமுள்ள நிறுவனங்கள் தபாலில் விண்ணப்பிக்கலாம்: தமிழக காவல் துறை அறிவிப்பு

சென்னை: காவலர் அங்காடிகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்ய விருப்பமுள்ள நிறுவனங்கள் இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக காவல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல் மானியக் கோரிக்கையின் போது காவலர் நலனுக்காக மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 6 மாவட்ட தலைமையகத்தில் காவலர் அங்காடிகள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி டிஜிபி சைலேந்திரபாபு சம்பந்தப்பட்ட மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு காவலர் அங்காடி தொடங்குவதற்கு பொருத்தமான கட்டிடங்களை தேர்வு செய்யுமாறு அறிவித்திருந்தார். அதைதொடர்ந்து காவலர் அங்காடிகளுக்கு பொருட்களை விநியோகம் செய்யும் பொருட்டு புதிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவும் மற்றும் ஏற்கனவே தமிழ்நாடு காவலர் அங்காடிகளுக்கு விநியோகம் செய்யும் நிறுவனங்களின் ஒப்பந்தங்களை புதுப்பிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

எனவே, தமிழ்நாடு காவலர் அங்காடிகளுடன் ஒப்பந்தம் செய்ய விருப்பமுள்ள நிறுவனங்கள் www.tnpolicecanteen.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து, பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சரியான இணைப்புகளுடன் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related Stories: