மரக்கன்றுகளை நட்டு சிறப்பாக பராமரித்து வரும் குடியிருப்பு நலச்சங்கங்கள், தொண்டு நிறுவனங்களை பாராட்டி சான்றிதழ்: அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்

சென்னை: சென்னையில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டு சிறப்பாக பராமரித்து வரும் குடியிருப்பு நலச்சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பாராட்டி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று ரிப்பன் மாளிகை வளாகத்தில் சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பூங்காக்கள், போக்குவரத்து தீவுத் திட்டுகள், சாலை மையத்தடுப்புகள் மற்றும் கட்டிடங்களின் சுற்றுச்சுவர்களின் வண்ண ஓவியங்கள் வரைந்து அழகுப்படுத்தும் பணிகளில் சிறப்பாக செயல்படுத்திய மண்டலங்களுக்கான பாராட்டு சான்றிதழ்களை  மண்டல அலுவலர், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோருக்கு வழங்கினார். தொடர்ந்து, ரிப்பன் மாளிகை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் புயல் மற்றும் இயற்கை சீற்றங்களை தாங்கக்கூடிய வகையில் அனைத்து மண்டலங்களிலும் பாரம்பரிய மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு குடியிருப்பு நலச் சங்கப் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் மாநகராட்சியுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். சென்னையில் கடந்த மே 7ம் தேதி முதல் 23ம் தேதி வரை மாநகராட்சி சார்பில் குடியிருப்பு நலச் சங்கங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து 87,004 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையர்கள், தலைமைப் பொறியாளர்கள்,  மண்டல அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: