ஹஸ்ரதுல்லா, குர்பாஸ், நஜிபுல்லா அதிரடி: ஸ்காட்லாந்துக்கு 191 ரன் இலக்கு

ஷார்ஜா: ஆப்கானிஸ்தான் அணியுடனான ஐசிசி உலக கோப்பை டி20 சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்தில், ஸ்காட்லாந்து அணிக்கு 191 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஷார்ஜா கிரிக்கெட் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக ஹஸ்ரதுல்லா ஸஸாய், முகமது ஷாஷத் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.4 ஓவரில் 54 ரன் சேர்த்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தது. ஷாஷத் 22 ரன் (15 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். ஹஸ்ரதுலா 44 ரன் (30 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி, மார்க் வாட் பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.

இதையடுத்து ரகமதுல்லா குர்பாஸ் - நஜிபுல்லா ஸத்ரன் இணைந்து ஸ்காட்லாந்து பந்துவீச்சை பதம் பார்த்தனர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு அதிரடியாக 87 ரன் சேர்த்து மிரட்டியது. குர்பாஸ் 46 ரன் (37 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஜோஷ் டேவி பந்துவீச்சில் கோயட்சர் வசம் பிடிபட்டார். அபாரமாக விளையாடிய நஜிபுல்லா ஸத்ரன் 59 ரன் (34 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தார். ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன் குவித்தது. கேப்டன் முகமது நபி 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்காட்லாந்து பந்துவீச்சில் சபியான் ஷரிப் 2, ஜோஷ் டேவி, மார்க் வாட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 191 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி களமிறங்கியது.

Related Stories:

More
>