பிஆர்க் தரவரிசை பட்டியல் வெளியீடு: சிறப்பு பிரிவினருக்கு நாளை கலந்தாய்வு

சென்னை: இளங்கலை கட்டிடக்கலை படிப்பிற்கு விண்ணப்பத்த 1,152 மாணவர்களுக்க நேற்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் சிறப்பு பிரிவினருக்கு நாளை (27ம் தேதி) கலந்தாய்வு நடைபெறும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 2021-22 கல்வி ஆண்டுக்கான பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நான்கு சுற்றுகளாக நடைபெற்றது. கலந்தாய்வு முடிவில் மொத்தம் 95,069 பொறியியல் இடங்கள் நிரப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து 2021-22ம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை கட்டிடகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்தது. 47 கல்லூரிகளில் மொத்தம் உள்ள 1,875 இடங்களுக்கு மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.

இந்த நிலையில் இளங்கலை கட்டிடகலை படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நேற்று (25ம் தேதி) தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி 1,467 மாணவர்களில் தகுதிவாய்ந்த 1,152 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு வருகிற 27ம் தேதி (நாளை) மாலை 7 மணி வரை விரும்பிய பாடம் மற்றும் கல்லூரிகளை தேர்வு செய்ய அவகாசம் தரப்படும் என்றும், வருகிற 29ம் தேதி இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொதுப்பிரிவினருக்கு வருகிற 29 மற்றும் 30ம் தேதிகளில் விரும்பிய பாடம் மற்றும் கல்லூரிகளை தேர்வு செய்ய அவகாசம் தரப்படும் என்றும் நவ.1ம் தேதி இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: