வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் மக்கள் பாதுகாப்பு, சுகாதாரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்களுடன் இன்று ஆலோசனை: வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறுகிறது

சென்னை: தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியுள்ள நிலையில், அதை எதிர்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார். சென்னையில், கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டியதால், ஏரிகள் நிரம்பின. இதனால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இருந்து, முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென தண்ணீர் திறந்து விடப்பட்டது. அங்கிருந்து வெளியேறிய வெள்ளநீர் சென்னை நகருக்குள் புகுந்தது. இதனால், பல பகுதிகள் நீரில் மூழ்கியது.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பலர் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டனர்.  இதுபோன்ற நிலை, இனி ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில் மழைநீர் கால்வாய் சீரமைப்பு, நீர் நிலைகளில் அதிகளவு தண்ணீரை தேக்கி வைப்பது உள்ளிட்ட முன்னேற்பாடுகள் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 20ம் தேதி செம்பரம்பாக்கம், புழல் ஏரிக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, அதிகாரிகளுடன் பேசிய முதல்வர், வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னேற்பாடு நடவடிக்கைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று (25ம் தேதி) தொடங்கியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பருவமழை காலத்தில்தான், அதிக மழைப் பொழிவு கிடைக்கும் என்பதால் ஏரி, குளங்கள், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன.சென்னையில் மழைநீர் கால்வாய்களும் முழுமையாக தூர்வாரப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, மாநகராட்சிக்கு உட்பட்ட ஒவ்வொரு மண்டலத்துக்கும் சிறப்பு அதிகாரிகளை நியமித்து நடவடிக்கைகளை பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த மாவட்டங்களில் மழை காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர்களுடன் இணைந்து செயலாற்ற உள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில் துவங்கியுள்ள வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (26ம் தேதி) காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்களும், அரசு துறை செயலாளர்களும், உயர் அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் 90 சதவீத அளவுக்கு நிரம்பியுள்ளன. தற்போது, வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் அதிக மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 மாதங்களுக்கு வடகிழக்கு பருவமழை காலம் என்பதால், அதற்கேற்ப முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் முதல்வர் உத்தரவிட உள்ளார். அதிக மழை பெய்தால் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைப்பது, மழை காலங்களில் தொற்று நோய்கள் ஏற்படாமல் பொதுமக்களை பாதுகாப்பது உள்ளிட்டவைகள் குறித்தும் இன்று ஆலோசனை நடத்தப்படுகிறது.

இதுதவிர, தற்போது பண்டிகை காலத்தை முன்னிட்டு கொரோனா ஊரடங்கில் பல்வேறு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கூட்டத்தை கட்டுப்படுத்தி கொரோனாவை தடுப்பது குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் கடந்த

சில நாட்களாக பெய்த மழையால் 90 சதவீத அளவுக்கு நிரம்பியுள்ளன.

Related Stories:

More
>