தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் 3 நாளில் சவரன் ரூ.368 அதிகரிப்பு: தீபாவளி நேரத்தில் நகை வாங்குவோர் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. 3 நாட்களில் மட்டும் சவரன் ரூ.368 அதிகரித்துள்ளது. தங்கம் விலை கடந்த 4 மாதத்துக்கு மேலாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருகிற 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் பெரும்பாலானவர்கள் நகை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால், நிறைய பேர் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தீபாவளி காரணமாக, தங்கம் விலையும் உயர்வை சந்திக்க தொடங்கியுள்ளது.

கடந்த 21ம் தேதி ஒரு சவரன் ரூ.35,856க்கு விற்கப்பட்டது. 22ம் தேதி கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,487க்கும், சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.35,896க்கும் விற்கப்பட்டது. 23ம் தேதி தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.28 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,515க்கும், சவரனுக்கு ரூ.224 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,120க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் சவரன் ரூ.264 அதிகரித்து. அதே நேரத்தில் மீண்டும் சவரன் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியது.

ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று காலை தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை ஏற்றத்தை தான் சந்தித்தது. கிராமுக்கு ரூ.3 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,518க்கும், சவரனுக்கு ரூ.24 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,144க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. அதாவது, கடந்த சனிக்கிழமை விலையை விட கிராமுக்கு ரூ.13 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4528க்கும், சவரனுக்கு ரூ.104 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,224க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.368 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தீபாவளி நெருங்க, நெருங்க இன்னும் நகை விலை அதிகரிக்க தான் வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

Related Stories: