ஒன்றிய அரசு அனுமதி அளித்த பிறகு இணை நோய் உள்ள குழந்தைகளுக்கு இலவச கொரோனா தடுப்பூசி: அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தகவல்

சென்னை: ஒன்றிய அரசு அனுமதி அளித்த பிறகு, இணைநோய்களுடன் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அப்போலோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு கீழ் உள்ள குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. அது தொடர்பான ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், விரைவில் அதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி கூறியதாவது: நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மற்றொரு புறம் குழந்தைகளிடையே ெகாரோனா பரவி வருகிறது. பெரும்பாலான குழந்தைகளுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றாலும் இணை நோய் உள்ள குழந்தைகளுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதைக் கருத்தில்கொண்டு, ரத்த நோய்கள், நரம்பு, இதய பாதிப்பு, புற்றுநோய், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு போன்ற நோய்களுக்கு உள்ளான குழந்தைகளுக்கு ஒன்றிய அரசு அனுமதியளித்த பிறகு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க அப்போலோ திட்டமிட்டுள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்க ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு கோவோக்சின், ஜைகோவ் டி போன்ற தடுப்பூசிகளைப் பயன்படுத்த அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகை தடுப்பூசிகள் அப்போலாவில் தேவையான அளவு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: