யோகா-இயற்கை மருத்துவ பட்ட மேற்படிப்பு 28ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: ஓமியோபதித்துறை இயக்குநரகம் அறிவிப்பு

சென்னை: யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டமேற்படிப்புக்கு வரும் 28ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அல்லது பிற பதிவு பெற்ற மருத்துவ பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டம் (BNYS), இயற்கை மருத்துவ பட்டயம் (N.D.OSM) ஒன்றை பெற்றிருக்க வேண்டும். அதற்குரிய சான்று இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர் தனது பெயரை தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்திருத்தல் வேண்டும். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் தவிர பிற பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட மருத்துவப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்திலிருந்து உரிய தகுதிச் சான்று பெற்று அதனை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை www.tnhealth.tn.gov.in, //www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத்துறையின் இணையதளங்களில் வரும் 28ம் தேதி முதல் நவம்பர் 20ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் இயக்குநரகத்தாலோ, தேர்வுக் குழு அலுவலகத்தாலோ வழங்கப்படமாட்டாது. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தேவையான இணைப்புகளுடன் உரிய உறையில் செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை, அரும்பாக்கம், சென்னை-600106 என்ற முகவரிக்கு நவம்பர் 20ம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நுழைவுத் தேர்வு நவம்பர் 25ம் தேதி காலை 9.30 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: