மாநகர போக்குவரத்து ஊழியர்களுக்கு இனிப்பு கொள்முதல் செய்ததில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை: அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பேச்சு

சென்னை: அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட, மாநகர பேருந்து சேவையை, நேற்று  போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார். சென்னை பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ இ.கருணாநிதி, தான் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, திமுக ஆட்சி அமைந்தவுடன், அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் மாநகர போக்குவரத்து சேவையை துவங்க நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, அவர் தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சி அமைந்த உடன், அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் மாநகர போக்குவரத்து சேவையை துவங்க வேண்டும் என, போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். இதனையடுத்து, நிறுத்தப்பட்ட பல்வேறு வழித்தடங்களில் மீண்டும் மாநகர போக்குவரத்து சேவையை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, தமிழக ஊரக தொழில்துறை மற்றும் குடிசை மாற்று வாரிய துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி முன்னிலை வகித்தார். போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 17 பேருந்துகள் சேவையை துவக்கி வைத்தார். இதில், பல்லாவரம் தொகுதியிலிருந்து, மாநகரப் பேருந்துகள் தடம் எண் (எம்52 விரிவு) பொழிச்சலூர் - காரம்பேடு, (570டி) தாழம்பூர் - கோயம்பேடு, (523) திருவான்மியூர் - முல்லிவாக்கம், (எஸ்81) குரோம்பேட்டை-  பொழிச்சலூர், (154பி) நங்கநல்லூர் - பூந்தமல்லி, (52சி) அஸ்தினாபுரம் -  தி.நகர், (70எச்) அஸ்தினாபுரம் - கோயம்பேடு, (552கே) கீழ்க்கட்டளை-திருப்போரூர், (60ஏ) பிராட்வே -குன்றத்தூர், (517கே) பல்லாவரம் -  கோவளம், (எஸ்66) குன்றத்தூர் -  பல்லாவரம், (எஸ்167) பட்டூர் - பல்லாவரம், (53இ) மாங்காடு -  குன்றத்தூர் ஆகிய வழித்தடங்களில் 17 பேருந்துகளின் சேவைகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறுகையில் :‘‘போக்குவரத்து ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்குவதில் எந்த ஒரு தவறும் நடைபெறவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில், ரூ.262 இனிப்புகள் வாங்கப்பட்டது. ஆனால், இந்த முறை ரூ.230க்கு அரசு நிறுவனமான ஆவினில் இனிப்புகள் கொள்முதல் செய்ய முதல்வர் உத்தரவு இட்டுள்ளார். எனவே, இதில் எந்த முறைகேடும் இல்லை. இதில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தவறான குற்றச்சாட்டை முன் வைக்கிறார். தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து ஆறு இடங்களில் 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மீண்டும் தீபாவளி முடிந்து சென்னை திரும்ப 17 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் அதிகரிக்கப்படும்.’’ என அவர் தெரிவித்தார்.

Related Stories: