பொய் உறுதியளித்ததால் நஷ்டம் சிம்பு, பெற்றோர் மீது நடவடிக்கை தேவை: தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திரைப்பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 12 ஆண்டுகளாக குளோபல் என்ற பெயரில் சினிமா நிறுவனம் நடத்தி வருகிறேன். கடந்த 2016ம் ஆண்டு நடிகர் சிம்பு நடித்த ‘அன்பானவன், அசராதவன்,அடங்காதவன்’ என்ற திரைப்படத்தை 50 சசதவீதமே தயாரித்த நிலையில்  வெளியிட்டேன். இதில் ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டால், அதற்கான நானே ஒரு திரைப்படத்தை இலவசமாக நடித்து தருவேன் என்றும் என்னையும் இயக்குநர் மற்றும் படத்தின் மேலாளர் ராஜேந்திரனை அழைத்து கூறினார்.

அதன்படி கடந்த 23.6.2017ம் தேதி படம் வெளியிடப்பட்டது. ஆனால் படம் சரியாக ஓடவில்லை. இதனால் ரூ.15 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதில் ரூ.12 கோடி விநியோகஸ்தர்களுக்குத் தர வேண்டியிருந்தது. அதன் பிறகு என்னால் அடுத்த படமும் தயாரிக்க முடியவில்லை. பிறகு நடிகர் சிம்பு என்னைபோனில் தொடர்பு கொண்டு விரைவில் அடுத்த படத்தை நீங்கள் தயாரிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னார். அவர் தந்த வாக்கின்படி அவரிடம் தேதி கூறும்படி கேட்டுக்கொண்டேன். ஆனால் அதன் பிறகு என் தொடர்பில் நடிகர் சிம்பு வரவில்லை.

இதுகுறித்து நான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தேன். அப்போது தலைவராக இருந்த விஷால் மற்றும் நிர்வாகிகள் விரைவில் ஒரு திரைப்படம் நடித்து தர வேண்டும் என கூறினர். அதன் பிறகு சங்க நிர்வாகம் மாறிய பிறகு, புதிய படம் அதெல்லாம் முடியாது என்று தற்பொழுதுவரை இழுத்தடித்து வருகிறார்கள். தீபாவளிக்கு ‘மாநாடு’ திரைப்பட வெளியிட தடை போட்டிருப்பதாகவும், கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும், மாமூல் கேட்பதாகவும் குற்றச்சாட்டினர். இவை அனைத்தும்  பொய்யானவை. மாநாடு திரைப்பட நவம்பர் 25ம் தேதி  வெளியிட உள்ளதாக அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை வெளியிட்டுள்ளார். எனவே இந்த விஷயத்தில் கமிஷனர் அலுவலகம் தலையிட்டு நல்லதொரு முடிவினை வழங்க வேண்டும். பொய்யாக உறுதியளித்து எனக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய நடிகர் சிம்பு மற்றும் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories:

More
>