கோயிலை சுற்றி இருக்கும் டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சென்னை கோடம்பாக்கம் புலியூர் பரத்வாஜேஸ்வரர் கோயிலில் உலோக திருமேனிகள் பாதுகாப்பு அறையை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று திறந்து வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் கோயில்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் களவு எச்சரிக்கை மணி பொருத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய பாதுகாப்பு அறை கட்டுவதற்கு ஒரு கோயிலுக்கு ரூ.10 லட்சம் வீதம் 3,087 கோயில்களுக்கு பாதுகாப்பு அறை கட்டுவதற்கு ரூ.308.70 கோடி தொகையை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக நிதியிலிருந்து 1.11.2018 நவம்பர் 1ம் தேதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், பந்தநல்லூர், பசுபதீஸ்வரர் கோயிலில் பாதுகாப்பு அறை ரூ.22.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, சென்னை கோடம்பாக்கம் புலியூர் பரத்வாஜேஸ்வரர் கோயிலில் ஆகம விதிகளின்படி முற்றிலும் மேம்படுத்தப்பட்ட புதிய வடிவமைப்பில் உலோக திருமேனிகள் பாதுகாப்பு அறை 22 சிலைகள் வைக்கும் அளவிற்கு கட்டப்பட்டுள்ளது.மீதமுள்ள 3,085 கோயில்களில் அந்தந்த கோயில்களின் ஆகமம் மற்றும் பழக்க வழக்கங்களின் படி விரைவில் கட்டி முடிக்கப்படும்.

இக்கோயிலை சுற்றி இருக்கும் மதுபான கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தேவாரம், திருவாசகம் போன்ற ஆன்மிக வகுப்புகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும். சிலர் நான் தொகுதி அரசியல் செய்வதாக கூறுகிறார்கள். அவர்களுக்கு நான் கூறிக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இதுவரை 130 மேற்பட்ட கோயில்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளேன். கொரோனா தொற்று முழுமையாக முடிந்தவுடன் பக்தர்கள் பக்தி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இறைவனை வழிபடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் அமெரிக்கா சென்ற போது கொண்டு வரப்பட்ட 11 சிலைகள் தமிழகத்தை சேர்ந்தவையாக இருப்பதாக கூறப்படுகிறது.அதுபற்றி ஒன்றிய அரசுடன் பேசியுள்ளோம். விரைவில் சிலைகள் மீட்டுக் கொண்டு வரப்படும். 47 முதுநிலை கோயில்களில் தல வரலாறு குறித்த புத்தகம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. முதற்கட்டமாக பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தலவரலாறு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: