பாலிடெக்னிக் விரிவுரையாளர் போட்டித்தேர்வு ஒத்திவைப்பு: அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் நியமனத்துக்கான போட்டித் தேர்வு 2 வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர்  பொன்முடி தெரிவித்தார். பொறியியல் கல்லூரிகளுக்கான கவுன்சலிங் தற்போது முடிந்துள்ள நிலையில் இன்னும் பல இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், பிஆர்க் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியானது. இதற்கிடையே உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி: பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர்களுக்கான போட்டித் தேர்வு டிஆர்பி மூலம் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை கணினி வழியாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த தேர்வில் பங்கேற்க உள்ளவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள தேர்வு மையங்களில் எழுத வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரினர். அதன் அடிப்படையில் தேர்வர்களின் அருகில் உள்ள தேர்வு மையங்களிலேயே தேர்வு எழுதுவது குறித்து புதிய அரசாணை வெளியிட்டு, 129 மையங்களில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும். மேலும் ஏற்கனவே வெளியிட்டுள்ள அரசாணை ஒத்தி வைக்கப்படுவதுடன் இதற்கான பணிகள் மேற்கொள்ள சில நாட்கள்  ஆகும் என்பதால் தேர்வை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்து பின்னர் நடத்தப்படும்.

கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் முறையாக இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யவும், கண்காணிக்கவும் சமூக நீதிக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஆய்வு செய்து அதன் பேரில் நியமனம் நடக்கும்.

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டில் பொறியியல் சேர்க்கை அதிகரித்து இருந்தாலும் முழு இடங்களும் இன்னும் நிரம்பவில்லை.தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் அதனுடன் இணைந்த 440 தனியார் பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சலிங் இரண்டு கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட கவுன்சலிங்கில் இதுவரை 95 ஆயிரம் இடங்கள் நிரம்பியுள்ளன. பிஆர்க் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு இன்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. மருத்துவ சேர்க்கை கவுன்சலிங் நடக்கும் போது இங்கிருந்து பல மாணவர்கள் மருத்துவம் படிக்க சென்றுவிட்டால் மேலும் பல இடங்கள் காலி ஏற்படும். அவற்றை எல்லாம் அப்படியே விட்டுவிடாமல் நிரப்புவோம். கடந்த ஆண்டு இதுபோல பொறியியல் படிப்புக்கான இடங்களில் காலி ஏற்பட்ட போது அதற்கு கவுன்சலிங் நடத்தாமல் விட்டுவிட்டனர். ஆனால் இந்த ஆண்டு அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படும்.இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

Related Stories: