தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மேல் முறையீட்டு மனுவுக்கு பதில் தராத 2 அதிகாரிகளுக்கு அபராதம்

தூத்துக்குடி: தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இரண்டாவது  மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணை  தூத்துக்குடி கலெக்டர்  அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார், மனுதாரர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மேல்முறையீட்டு மனுவிற்கு  பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை வருவதற்கு சிரமமாக இருப்பதால்,  மனுதாரர்கள், பொது தகவல் அலுவலர்கள் வசதிக்கு ஏற்ப கடந்த 3 ஆண்டுகளாக  மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தி வருகிறோம்.

அதனடிப்படையில்  தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நிலுவையில் உள்ள மேல் முறையீடு  மனுக்கள் குறித்து விசாரணை நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் குறைவான  மனுக்கள்தான் நிலுவையில் உள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 9 ஆயிரம்  மனுக்கள் நிலுவையில் உள்ளன. தற்போது மக்கள் அதிக அளவில் தகவல்  அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஆண்டுக்கு  குறைந்தது 3.5 லட்சம் மனுக்கள் வருகின்றன. காழ்ப்புணர்ச்சியுடன்  அனுப்பப்படும் மனுக்களை கண்டறிந்து மேல்விசாரணைக்கு பிறகு  உரிய  நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணப்படும். 2வது மேல்முறையீட்டு  மனுவுக்கும் உரிய தகவல் அளிக்காத பொதுத் தகவல் அலுவலர்களுக்கு ரூ.25 ஆயிரம்  அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த  துணை பிடிஓ நிலையில் உள்ள இருவருக்கு தலா ரூ.25  ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More
>