மருத்துவம் படிக்க பாக். செல்ல வேண்டிய அவசியமில்லை: ஜம்முவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

ஸ்ரீநகர்:  மருத்துவம் படிப்பதற்காக ஜம்முவில் இருந்து யாரும் பாகிஸ்தானுக்கு செல்லவேண்டிய அவசியமில்லை என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.  ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகார சட்டம் ரத்து செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 நாள் பயணமாக கடந்த சனியன்று ஜம்மு காஷ்மீருக்கு சென்றார். பல்வேறு மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்ததோடு, பல்வேறு திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். மூன்றாவது நாளான நேற்று பிமீனாவில் 500 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவமனையை அவர் தொடங்கி வைத்தார். மேலும் 115 கோடியில் கட்டப்பட இருக்கும் ஹந்த்வாரா மருத்துவ கல்லூரி, ₹46 கோடியில் எஃகு பாலம், ₹4000 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள் உள்ளிட்டவற்றுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.

இதனைதொடர்ந்து பேசிய அமைச்சர் அமித்ஷா, ‘‘பாகிஸ்தான் மற்றும் பிரிவினைவாதிகளுடன் பேசவேண்டும் என்று பரிந்துரை செய்தவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் என்ன செய்தது என்று கேட்க வேண்டும். காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பாருங்கள்.  அவர்களுக்கு மின்சாரம், சாலை, சுகாதார வசதி, கழிவறை வசதி உள்ளதா? எந்த வசதியும் செய்து தரப்படவில்லை. ஆனால் காஷ்மீர் மக்கள் ஒவ்வொருவரும் மற்ற இந்தியர்களை போல அதே உரிமைகளை பெற்றுள்ளனர். ஜம்முவை ஆட்சி செய்த 3 குடும்பங்களும் மூன்று மருத்துவ கல்லூரிகளை மட்டுமே அமைத்தன. பிரதமர் மோடி 7 மருத்துவ கல்லூரிகளை உறுதி செய்துள்ளார். இதற்கு முன் 500 மாணவர்கள் மருத்துவம் படித்தனர். புதிய கல்லூரிகள் மூலமாக இனி 2000 இளைஞர்கள் மருத்துவர்கள் ஆவார்கள். மருத்துவம் படிப்பதற்காக காஷ்மீரை சேர்ந்த யாரும் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை”. என்றார்.

புல்லட் கவசம் அகற்றம்

ஸ்ரீநகரில் பொதுமக்கள் கூட்டத்தில் அமைச்சர் அமித் ஷா நேற்று பேசினார். இதற்காக விழா மேடையில் துப்பாக்கி குண்டுகள் துளைக்காத வகையில் புல்லட் கண்ணாடி கவசம் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்குள் இருந்து பேசுவதற்கு அமித் ஷா மறுப்பு தெரிவித்தார். உடனடியாக அதனை அகற்றும்படியும் அவர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து குண்டு துளைக்காத கண்ணாடி அகற்றப்பட்டது. அதன் பின்னர் பேசிய அமித் ஷா, ‘‘நான் உங்களிடம் வெளிப்படையாக பேச விரும்புகிறேன். இதற்கு எதற்காக புல்லட் ப்ரூப் அல்லது பாதுகாப்பு. நான் உங்கள் முன் அப்படியே நின்று பேசுகிறேன்” என்றார்.

Related Stories: