டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரே பாலின திருமணங்களுக்கு அங்கீகாரம் கோரிய வழக்குகள்: நவ.30ம் தேதி இறுதி விசாரணை

புதுடெல்லி: ஒரே பாலின திருமணங்களுக்கு இந்து திருமண சட்டம், சிறப்பு திருமண சட்டம் மற்றும் வெளிநாட்டு திருமண சட்டங்களின் கீழ் அங்கீகரிக்கக் கோரிய வழக்குகளின் இறுதி விசாரணை நவம்பர் 30ம் தேதி தொடங்கும் என டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஒரே பாலின திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதில், அபிஜித் ஐயர் மித்ரா மற்றும் 3 பேர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘ஒரே பாலின உறவு சட்டவிரோதமானதல்ல என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதன்படி, இந்து திருமண சட்டம் மற்றும் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் ஒரே பாலின திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

இதே போல, சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் இரு பெண்கள் திருமணம் செய்து கொள்ளவும், ஒரே பாலின திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கக் கோரியும் மனு செய்துள்ளனர். அமெரிக்காவில் திருமணம் செய்து கொண்ட 2 ஆண்கள், வெளிநாட்டு திருமண சட்டத்தின் கீழ் தங்களின் திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி மனு செய்துள்ளனர். இந்த மனுக்களை ஒன்றாக விசாரிக்கும் டெல்லி உயர் நீதிமன்றம் இறுதி விசாரணை அடுத்த மாதம் 30ம் தேதி தொடங்கும் என நேற்று பட்டியலிட்டுள்ளது.

Related Stories: