பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு: இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி 5 ஆண்டுகளில் அதிகரிப்பு

புதுடெல்லி: குஜராத்தின் காந்திநகரில் பிரமாண்ட ஆயுத கண்காட்சி அடுத்த ஆண்டு மார்ச் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்க உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி கடந்த 5 ஆண்டில் 334 சதவீதம் அதிகரித்துள்ளது. 75க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்திய தயாரிப்பு தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது, இந்திய ஆயுத தயாரிப்புகளின் தரத்தையும், மற்ற நாடுகளுடன் போட்டி போடும் திறனையும் சுட்டிக்காட்டுகிறது. அடுத்த ஆண்டு நடக்கும் ஆயுத கண்காட்சி, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இந்தியா எட்டிய சாதனையை விளக்கும் விதத்தில் இருக்கும். இதில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆயுதங்கள், பாதுகாப்பு அமைப்புகள் அனைத்தும் ஒருசேர இடம் பெற்றிருக்கும். கடந்த சில ஆண்டாக, உள்நாட்டு பாதுகாப்பு தொழில் துறையை ஊக்கப்படுத்தும் நடவடிக்கையை தற்போதைய ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், போக்குவரத்து விமானம், இலகுரக ஹெலிகாப்டர்கள், நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளிட்ட 101 ஆயுதங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது. 2024ம் ஆண்டுக்குள் இது நடைமுறைப்படுத்தப்படும்.

* ரேடார், ஏவுகணை எச்சரிக்கை கருவிகள் உள்ளிட்ட 108 தளவாடங்களை இறக்குமதி செய்ய சமீபத்தில் அரசு தடை விதித்தது.

* கடந்த ஆண்டு மே மாதம், பாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீ்டு 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த நடவடிக்கைகள் மூலம் உள்நாட்டில் ஆயுத உற்பத்தி தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

அலுவலகத்தில் திடீர் ஆய்வு

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி ரைசினா ஹில்ஸ் பகுதியில் உள்ள பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற அவர் பணிச் சூழல், சுத்தமாக வைத்திருத்தல் குறித்து ஆய்வு செய்தார். பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அலுவலக மேம்பாட்டிற்கான சில அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கினார்.

Related Stories:

More
>