சென்ட்ரல் விஸ்டா திட்டம்: நிலப்பயன்பாட்டில் திடீர் மாற்றம்: ஒன்றிய அரசு பதிலளிக்க நோட்டீஸ்

புதுடெல்லி: சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்காக ‘பொது பயன்பாட்டு நிலப்பகுதி’, ‘குடியிருப்பு’ பகுதியாக மாற்றப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ராஜீவ் சூரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கான ‘பொது பயன்பாட்டு’ நிலங்களாக இருந்த சில பகுதிகள், ‘குடியிருப்பு’ பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. நில பயன்பாட்டில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றத்தினால், சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் பசுமையான, திறந்தவெளி இடத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் உரிமையை பறிக்கிறது. வாழ்வதற்கான உரிமை ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவிக்கும் உரிமையையும் உள்ளடக்கியது. நில பயன்பாடு மாற்றம் மூலம் இந்த உரிமை பறிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இந்த மனு நீதிபதிகள் கான்வில்கர், சி.டி.ரவிக்குமார் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா ஆஜராகி, ‘‘இதுதொடர்பாக அரசிடமிருந்து கருத்துக்களை கேட்டறிவேன். அதே சமயம், நாடாளுமன்றம், துணை ஜனாதிபதி வீடுகள் அமைவதால் பாதுகாப்பு கருதி அங்கு பொழுதுபோக்கு பகுதிகள் இடம்பெற வாய்ப்பில்லை’’ என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘பொது பயன்பாட்டு பகுதியை அரசு நீக்கிவிட்டதா அல்லது வேறு இடத்திற்கு மாற்றி இருக்கிறதா என்பது குறித்து 3 நாளில் பதிலளிக்க வேண்டும்’’ என நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.

Related Stories:

More
>