×

ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது: சூடான் பிரதமர், அமைச்சர்கள் திடீர் கைது: எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

கைரோ: சூடான் நாட்டின் இடைக்கால பிரதமர் அப்தல்லா ஹம்தக் மற்றும் பல அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு ரகசிய இடத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கிலும் மக்கள் சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. வட ஆப்ரிக்க நாடான சூடானில் கடந்த 30 ஆண்டாக அதிபராக பதவி வகித்து வந்தவர் உமர் அல் பஷிர். இவருக்கு எதிராக கடந்த 2019ம் ஆண்டில் நாட்டில் தொடர் போராட்டங்கள் வெடித்தன. இதைத் தொடர்ந்து பஷிரை ராணுவம் கைது செய்து, அதிபர் பதவியிலிருந்து நீக்கியது. இதன் பின் புதிய ஆட்சி அமைப்பதில் ராணுவத்திற்கும், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்த குழுவிற்கும் இடையே உடன்பாடு எட்டவில்லை. 2023ல் தேர்தல் நடத்தி புதிய அரசை தேர்ந்தெடுப்பதெனவும் அதுவரை பிரதமர் அப்தல்லா ஹம்தக் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, கடந்த மாதம் ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற ராணுவம் முயற்சித்தது. இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால், ராணுவ ஆட்சியை அங்கீகரிக்குமாறு பிரதமர் அப்தல்லாவுக்கு நெருக்கடி தரப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் அப்தல்லா மற்றும் பல்வேறு அமைச்சர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக அந்நாட்டின் தகவல் தொடர்பு துறை அமைச்சகம் தனது பேஸ்புக்கில் தகவல் வெளியிட்டுள்ளது. பிரதமர் அப்தல்லா உள்ளிட்ட அமைச்சர்கள் ரகசிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இன்டர்நெட் சேவையை ராணுவ படைகள் துண்டித்துள்ளன. தலைநகர் கர்டோயம் மற்றும் ஓம்டர்மன் நகரங்களில் அனைத்து மேம்பாலங்களும் மூடப்பட்டுள்ளன.

இதன் மூலம் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஆதரவு குழுவினர் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். முக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு, சாலைகளில் டயர்களை எரித்து போராட்டம் நடக்கிறது. இதனால் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் அரசு செய்தி சேனல்கள் நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு தேச பக்தி பாடல்களை ஒளிபரப்பி, நைல் நதியை காட்டிக் கொண்டிருக்கின்றன. சூடான் நிலவரத்தை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

அவசரநிலை பிரகடனம்
சூடானின் இடைக்கால ராணுவ சபை தலைவர் ஜெனரல் அப்தல் பட்டா பர்கான் தொலைக்காட்சியில் நேற்று அளித்த உரையில், ‘‘அரசியல் பிரிவுகளுக்கு இடையேயான சண்டையே ராணுவத்தை தலையிட தூண்டி உள்ளது. இதனால் ஆளும் இறையாண்மை கவுன்சிலையும், பிரதமர் அப்தல்லா ஹம்டோக் தலைமையிலான அரசாங்கத்தையும் கலைக்கிறேன். நாட்டின் ஜனநாயக மாற்றம் நிச்சயம் நிகழும். புதிய தொழில்நுட்ப அரசாங்கம் தேர்தலை நடத்தி மீண்டும் ஜனநாயக ஆட்சியை கொண்டு வரும்’’ என்றார். அதோடு நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்துவதாக அவர் அறிவித்தார்.

துப்பாக்கி சூடு 2 பேர் பலி
சூடானில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தை கலைத்தனர். தலைநகர் கர்டோயமில் போராட்டக்காரர்களை நோக்கி ராணுவத்தினர் சுட்டதில் 2 பேர் பலியானதாக கூறப்படுகிறது. போராட்டத்தில் இதுவரை 80 பேர் காயமடைந்துள்ளனர். சூடானில் ஏற்பட்டுள்ள ராணுவ புரட்சிக்கு அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், அரபு நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

Tags : Army ,PM , Military regime, Prime Minister of Sudan, arrested
× RELATED ஈரான் அனுப்பிய 300 டிரோன்களை வழிமறித்து...