வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: மழைநீர் வடிகால்வாய்கள் தூர்வாரும் பணி தொடக்கம்

திருப்போரூர்: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருப்போரூர் ஒன்றியம், தையூர் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரியின் கால்வாய்கள் தூர்வாரி சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நடந்தது. அப்போது, தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களில் தண்ணீர் தேங்கும் இடங்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்ற வேண்டும், மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் கால்வாய்கள் தூர்வார வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகள் உள்ள மதுராந்தகம், தையூர், பொன்விளைந்த களத்தூர் ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் வடியும் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார். இந்நிலையில், திருப்போரூர் ஒன்றியம் தையூர் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரி 16 அடி உயரம் கொண்டதாகும். மழை காலங்களில், இந்த ஏரியில் இருந்து மழைநீர் வெளியேறினால் பழைய மாமல்லபுரம் சாலையை வெள்ளநீர் கடந்து செல்லும். அப்போது போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் தையூர் ஏரியில் இருந்து பழைய மாமல்லபுரம் சாலை வரை உள்ள 20 அடி அகல மழைநீர் கால்வாயை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. பொக்லைன் இயந்திரம் மூலம் கால்வாயின் இருபுறமும் முளைத்திருந்த செடிகள் அகற்றப்பட்டு, கரை பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணியை செங்கல்பட்டு மாவட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Related Stories: