பிச்சாட்டூர் ஏரி திறப்பு: ஆரணியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

ஊத்துக்கோட்டை:  ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரியில் இருந்து தண்ணீர்  திறப்பு ஆரணியாற்றில்  தண்ணீர் வரத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள ஆந்திர மாநிலமான நாகலாபுரம், நந்தனம், பிச்சாட்டூர் பகுதிகளில்  கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால்,  ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரி நிரம்பியது.  இந்த ஏரியின் கொள்ளளவு   281 மில்லியன் கன அடியாகும். இதில்,  280 மில்லியன் கன அடி நீர் இருப்பு வந்தால் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.  

இந்நிலையில், நேற்று 280 மில்லியன் கன அடி நீர் இருப்பு அதிகரித்ததால்  ஏரியில் இருந்து  தண்ணீர் திறக்கப்பட்டது.  ஆந்திர மாநிலம் சத்தியவேடு எம்எல்ஏ ஆதிமூலம், ஆந்திர பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மதனகோபால் ஆகியோர் தொடக்கத்தில் 4 மதகுகள் வழியாக வினாடிக்கு 200 கனஅடி வீதம்  தண்ணீர்  திறந்தனர்.  பின்னர், படிப்படியாக 400 கன அடி வரை திறந்து வைத்தனர்.  இதனைத்தொடர்ந்து,  காலை 9.40 மணிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் 10.40க்கு 3 மதகுகளை மூடி விட்டனர்.  தற்போது ஒரு மதகு வழியாக மட்டும் 400 கன அடி தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர்  தற்போது நாகலாபுரம், நந்தனம், காரணி வழியாக சுருட்டபள்ளி அணையை அடைந்து ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் பாய்கிறது.  இந்த தண்ணீர் திறக்கப்பட்டு ஆரணியாற்றில் தண்ணீர் வருவதால் தமிழக விவசாயிகள் 6600 ஏக்கர் விவசாய நிலமும், ஆந்திர விவசாயிகள் 5500 ஏக்கரும் பயனடைவார்கள்.

இதுகுறித்து ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பிச்சாட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு  1.853 டிஎம்சி தண்ணீராகும்.  தற்போது, 1.664 டிஎம்சி தண்ணீர் உள்ளது.  மொத்த உயரம் 31 அடி இதில் 29 அடி உயர்ந்தால் தண்ணீர் திறப்போம். தற்போது, 29 அடியை தொட்டதால் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்படி தற்போது வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  மேலும், மழை தொடர்ந்து பெய்தால் கூடுதலாக தண்ணீர்  திறக்கப்படும்.  மேலும், வினாடிக்கு தற்போது சுற்றி உள்ள மழை பகுதிகளிலிருந்து 90 கன அடி வீதம் தண்ணீர் வந்துக் கொண்டிருந்கிறது. மழை தொடர்ந்து பொய்தால் தண்ணீர் திறப்பது கூடுதலாக்கப்படும், என்றனர்.

Related Stories:

More
>