×

ராகுலை கவர்ந்த இளம் மொழி பெயர்ப்பாளர்

நன்றி குங்குமம் தோழி

கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல்காந்தி பிளஸ் 2 மாணவி ஒருவருக்கு சாக்லெட் கொடுத்து பாராட்டினார். ராகுலின் ஆங்கில பேச்சை மலையாளத்தில் மொழி பெயர்த்ததற்காகத்தான் இந்த பாராட்டு. இந்த தகவலை மலையாள நெட்டிசன்கள் `சபாஷ் ஸஃபா பெபின்’  என ஹேஸ்டேக் போட்டு கொண்டாடினார்கள்.

டிசம்பர் முதல்வாரம் தனது தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் தனது தொகுதிக்கு உட்பட்ட சுல்தான்பேரியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஷகலா பள்ளிக்கூடத்தில் பாம்பு கடித்து இறந்தார். அந்த குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த ராகுல் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார். கருவாராக்குண்டு பகுதியில் நடந்த பள்ளி கட்டிட திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல், மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.

அப்போது, ராகுல் காந்தி கூட்டத்தில் இருந்தவர்களை நோக்கி எனது பேச்சை மொழி பெயர்க்க முடியுமா? எனக் கேட்டார். உடனே அந்தப் பள்ளியில் படிக்கும் ஃபாத்திமா ஸஃபா என்ற 12 ம் வகுப்பு மாணவி தைரியமாக மேடைக்கு வந்தார். மாணவியை வரவேற்ற ராகுல், அவர் பெயரை கேட்டுக்கொண்டார். பின்னர், ராகுல் மாணவர்கள் மத்தியில் அறிவியல் குறித்தும் நாடு குறித்தும் பேச அதைத் தெளிவாக மலையாளத்தில் மொழிபெயர்த்தார் ஸஃபா. அவரின் மொழிபெயர்ப்பை மாணவர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

ராகுல் பெரும்பாலும் அறிவியல் தொடர்பான கருத்துக்களை பேசினார். அதை அப்பகுதி மக்களுக்கு எளிமையாக புரியும் வகையில் சரளமாக மொழிபெயர்த்ததற்கு தான் ராகுல் ஸஃபாவிற்கு சாக்லெட் பரிசளித்தார். பல அரசியல்வாதிகளே ராகுலின் பேச்சை தப்பும் தவறுமாக மொழிபெயர்த்த சம்பவங்கள் முன்பு நடந்துள்ளது. ஆனால் ஸஃபாவின் மொழிபெயர்ப்பு ராகுலை கவர்ந்துவிட்டது.

இதுதொடர்பாக பேசிய அப்பள்ளி ஆசிரியர் ஒருவர், ``ராகுல் காந்தியின் உரையை ஸஃபா சிரமமின்றி மொழிபெயர்த்தார். அவள் பொருத்தமான வார்த்தைகளைக் குறிப்பாக மலப்புரம் பாஷையில் உடனுக்குடன் மொழிபெயர்த்து எங்கள் அனைவரையும் திகைக்க வைத்துவிட்டாள். ஸஃபாவால் எங்கள் பள்ளிக்குப் பெருமை” எனக் கூறியுள்ளார். ஸஃபாவின் தந்தை குன்கி முகமது பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறார்.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

Tags : Rahul ,
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்