29.5 கோடி பேர்தான் 2 டோஸ் போட்டுள்ளனர்.! 100 கோடி தடுப்பூசி என்பது ‘பாசாங்கு’: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: ஒன்றிய அரசு நாட்டின் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட்டு விட்டது போல் பாசாங்கு செய்து வருகிறது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.  நாடு முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன் 100 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்தது. பிரதமர் மோடி, 100 கோடி தடுப்பூசி போடப்பட்டது குறித்து தங்களது அரசின் சாதனை என்று குறிப்பிட்டு பேசினார். இந்நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சிலிகுரியில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், ‘தடுப்பூசி போடுதல் என்பது இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டால் தான் முழுமையடையும்.

இந்தியாவில் 295.1 மில்லியன் (29.5 கோடி) மக்கள் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசிகளை போட்டுள்ளனர். ஆனால் ஒன்றிய அரசு நாட்டின் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட்டு விட்டது போல் பாசாங்கு செய்து வருகிறது. தடுப்பூசி போடப்படாமல் கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர். இதற்கிடையே, அடுத்த சில மாதங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. மேற்குவங்கத்திற்கு 14 கோடி தடுப்பூசிகள் தேவை; ஆனால் எங்களுக்கு 7 கோடி தடுப்பூசிதான் கிடைத்தது. இருப்பினும் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளை மக்களுக்கு போட்டுவிட்டோம். சிலிகுரியில் 40% மக்கள் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் அதிகளவு தடுப்பூசிகள் சப்ளை செய்தனர். ஆனால் மேற்குவங்கத்திற்கு அந்தளவிற்கு தரவில்லை’ என்று கூறினார்.

Related Stories: