பழனியில் சைரன் பொருத்திய காரில் பவனி வந்த போலி ஐ.ஏ.எஸ் கைது

திண்டுக்கல்: பழனியில் சைரன் பொருத்திய காரில் பவனி வந்த போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியை போலீசார் கைது செய்தனர். மதுரை திருச்செந்தூர் கோயில்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக்கூறி சிறப்பு சாமி தரிசனம் செய்த அவர் சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் செலுத்தாமல் பயணித்திருப்பது தெரிய வந்துள்ளது. கைதான அந்த போலி அதிகாரி நாகப்பட்டினம் மயிலாடுதுறையை சேர்ந்த குமார் என போலீசார் தெரிவித்துள்ளனர். சைரன் பொருத்திய ஸ்கார்பியோ காரில் பயணித்து வந்த அவர் அங்குள்ள தேவஸ்தான தங்கும் விடுதிக்கு சென்று இலவசமாக அறை ஒதுக்கும் படி கேட்டுள்ளார்.

அப்போது அவர் தன்னை ஐ.ஏ.எஸ் அதிகாரி என கூறியதால் சந்தேகம் அடைந்த விடுதி மேலாளர் அடையாள அட்டையை காட்டும்படி கூறியது பழனியில் உள்ள வருவாய் துறை அதிகாரி ஒருவரின் பரிந்துரை அவசியம் எனவும் தெரிவித்துள்ளார். அதற்கு குமாரின் பதில் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் பழனி அடிவார காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். போலீஸ் வருவதை அறிந்த குமார் தனது காரை விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். அவரை கோவில் ஊழியர்கள் துரத்திச்சென்று பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு எலக்ட்ரீசியன் வேலை செய்த குமார் ஐஏஎஸ் அதிகாரி போன்று நடித்து பல்வேறு இடங்களில் சலுகைகளை பெற்றுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்ற அவர் அங்கும் தம்மை ஐஏஎஸ் அதிகாரி என காட்டிக்கொண்டு சிறப்பு தரிசனம் செய்துள்ளார். சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் பயணித்திருப்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மோசடி அரசாங்க முத்திரையை தவறாக பயன்படுத்தியது. அதிகார துஷ்பிரயோகம் ஆகிய பிரிவுகளில் கீழ் குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். சைரன் பொருத்திய அவரது காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: